IETAMIL Sunday Analysis: வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா தமிழ் சினிமா?

வட சென்னையில் வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு ஆகியவற்றை தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவிட்ட சினிமாவில் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது விவாதத்துக்குரிய ஒன்று.

By: Updated: September 1, 2019, 09:47:40 AM

ஒரு மெட்ரோபாலிட்டன் நகரமாக அறியப்படும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு என்று தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. அதிலும், வட சென்னைக்கு நிலவியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாவும் தனித்தன்மைகள் உண்டு. அத்தகைய வட சென்னையில் வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு ஆகியவற்றை தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவிட்ட சினிமாவில் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது விவாதத்துக்குரிய ஒன்று.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் தென் தமிழகத்தைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களாக வெற்றி பெற்றுவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வட சென்னையைக் களமாகக் கொண்டு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றதோடு விமர்சகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. அத்தகைய படங்கள் எல்லாம் வட சென்னையை பற்றியும் அங்கே வாழும் மனிதர்களைப் பற்றியும் பொதுச்சமூகத்தின் முன்பு ஒரு சித்திரத்தை முன்வைத்துள்ளது. அது வட சென்னை மக்கள் வாழ்வின் யதார்த்தத்தோடு எந்தளவுக்கு பொருந்திப்போகிறது என்பதும் அது அவர்களை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதும் பற்றி விமர்சனங்கள் உள்ளன.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் வட சென்னை மனிதர்களை பெரும்பாலும் தாதாக்களாகவும், ரௌடிகளாகவும், உதிரிகளாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் அவர்களின் வாழ்க்கை மிக மேம்போக்காக காட்டப்பட்டு வந்தது. அந்த போக்கு கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களால் மாறியுள்ளது இதில் விமர்சனங்கள், நிராகரிப்புகள் இருக்கலாம்.

வட சென்னை நிலவியலை, மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்படியான கடந்த சில ஆண்டுகளில் சில குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அது குறித்த விமர்சனங்கள், மாற்றுக்கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

வட சென்னையைக் களமாகக் கொண்டு வெளியான தமிழ் சினிமாக்கள் பற்றி சென்னையை மையமாகக் கொண்டு பேட்டை நாவல் எழுதியுள்ள தமிழ்பிரபா குறிப்பிடுகையில்,“தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் பெரும்பான்மையோனோர் நம் தலைநகரத்தை மையப்படுத்தி எழுதியிருந்த சிறுகதைத் தொகுப்பு ஒன்றை படித்தேன். ஒரு சென்னைவாசியாக என்னால் அதிலிருந்த ஒரு கதையில் கூட ஒன்றிப்போக இயலவில்லை.
இலக்கியத்திலேயே சென்னைக்கான இடம் இதுதான் என்றால், சினிமாவில் சென்னை எவ்வளவு மானபங்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். நூற்றாண்டை கடந்துள்ள தமிழ்சினிமாவில், சென்னை என்றதும் சென்ட்ரல் இரயில் நிலையம் அல்லது ரிப்பன் பில்டிங் கடிகாரத்தைக் காட்டியவுடன் ஊரிலிருந்து வந்து இறங்கிவரின் பர்ஸை ஒருவன் பிக்பாக்கெட் அடித்திருப்பான் “இது மெட்ராஸ்பா, இங்ககெல்லாம் இப்டித்தான், ஒய்ங்கா வூடு போய் சேரு” என ஒருவர் வழி அனுப்பி வைப்பார்! “அய், கயித, கசுமாலம், பேமானி ரோட்ட பாத்து போ” என ரிக்ஷாக்காரர் அல்லது ஆட்டோக்காரர் திட்டுவார். அவ்வளவுதான் சென்னையின் பூகோளவியல் முடிந்தது.” என்று சென்னையைப் பற்றிய படங்களை தமிழ் பிரபா கடுமையாக விமர்சிக்கிறார்.

சென்னை வட்டார மொழி பற்றி தமிழ் சினிமா எப்படி காட்டியிருக்கிறது என்று தமிழ் பிரபா குறிபிடுகையில், “மெட்ராஸ் பாஷை” என்று வசனங்களால் சென்னையை அலங்கோலம் ஆக்குவார்கள். இதில் சோ, கமல்ஹாசன், மனோரமா ஆகியோரின் பங்கு கணிசமாக இருந்தது. குறிப்பாக ‘சவால், மஹராசன்’ ஆகிய படங்களில் கமல் பேசிய சென்னைத் தமிழ் எத்தனை அன்னியமானதென்று சொந்த ஊர் வாசிகளுக்கேத் தெரியும். சினிமா மெட்ராஸ் பாஷை என்று மொழிச்சிதைவு செய்ததோடு அன்றி கதாநாயகனை திருடன், ரௌடி அல்லது அடியாள் போன்ற கதாப்பாத்திரமாக காட்டவேண்டுமென முடிவு செய்துவிட்டால் அவன் பெரும்பாலும் சென்னை குடிசைப்பகுதி, ஹவுசிங் போர்டு ஏரியாவைச் சார்ந்தவனாகத்தான் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஜெமினி, ஆறு, என இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரும் எந்த ரௌடி கதாப்பாத்திரத்தை யோசித்துப் பார்த்தாலும் இது பொருந்தும். அங்கு வாழும் மக்களைக் கூட நம் சினிமா மலினப்படுத்தியே சித்தரித்திருக்கிறது. இதையெல்லாம் மிகச் சாதரணமாக நகைச்சுவை என்று நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த வகை படங்களெல்லாம் சென்னையில் வசிக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றிய தவறான பொதுப்புத்தியை சிறுகச் சிறுக விதைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படியாக வெளியான படங்களைப் பற்றி குறிப்பிட்ட தமிழ் பிரபா, “சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நியாயமான திரைப்படங்களும் இந்த நூறாண்டுகளில் வராமல் இல்லை. அதற்கு முதல் விதையைத் தூவியது 1990’ல் பாரதிராஜா இயக்கிய “என்னுயிர் தோழன்” திரைப்படத்தைச் சொல்லலாம். இந்த படம் வந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்துடன் தாராளமாக ஒப்பீடு செய்ய முடியும். சென்னை அடித்தட்டு மக்களைப் பிரதானப்படுத்தி எடுத்த சினிமாக்களிலேயே உச்சம் என சொல்ல முடியுமென்றால் ‘அட்டக்கத்தி’ படத்தைச் சொல்லலாம்.

நூற்றாண்டை கடந்துள்ள தமிழ் சினிமாவில் சென்னை அடித்தட்டு மக்களுக்கு நியாயம் செய்த படங்களை பத்து விரல்களுக்குள் எண்ணி விடலாம். ஒரு சினிமா ரசிகனாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஊரைப் பற்றிய பதிவும் அதற்கே உரிய மண்சார்ந்தத் தன்மையுடன் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு ஓரளவு ரசனைசார்ந்த பொதுப்புத்தியிலிருந்து விலகி நிற்கக்கூடிய படைப்பாளிகளுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடம் தர வேண்டும். இல்லாவிடில், உண்மையை மறைத்து விட்டு அடுத்த நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலும் நமக்கு ‘படம்’தான் காட்டிக் கொண்டிருப்பார்கள்.” என்று தமிழ் பிரபா தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

சென்னையை மையமாக வைத்து கருப்பர் நகரம் என்ற நாவலை எழுதியுள்ள எழுத்தாளர் கரண் கார்க்கி கூறுகையில், “முன்பை ஒப்பிடும்போது, இப்போது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்துக்கு பிறகு சொல்லும்படியாக எதுவும் இல்லை. வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் சில முரண்கள் இருந்தாலும் உண்மையிலேயே நல்ல படம்தான். அறம் படத்தில் கோபி நயினார் பாசாங்கு இல்லாமல் காட்டியிருப்பார். கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் இருந்து நிறையபேர் சினிமாவுக்கு கதை எழுதுபவர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வர தொடங்கியிருக்கிறார்கள். அதனால், சென்னையைப் பற்றி சித்தரிக்கும்போது ஒரு எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்னை மொழி பற்றி சினிமாவில் காட்டுவது போல், இல்லை சென்னையின் மொழியே மாறி வந்திருக்கிறது. எனது தாத்தா பேசியது போல எனது தந்தை பேசவில்லை. எனது தந்தையைப் போல நான் பேசவில்லை. நான் பேசுவது போல என் மகன் பேசவில்லை. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னையின் மொழி மாறிவருகிறது.

சென்னையைப் பற்றி படம் எடுக்கும்போது ரௌடிஸமாகத்தான் காட்டுகிறார்கள். எல்லா பகுதிகளிலும் ஒரு பெரிய சண்டை நடக்கும். அது போலதான், சென்னையிலும் சண்டை நடக்கும் அதை வைத்து வட சென்னையை முழுவதுமாக வன்முறையாக காட்டுகிறார்கள். சென்னையை முழுமையாக காட்டுகிற படங்கள் இல்லை. சென்னையைப் பற்றி படம் எடுக்க வேண்டுமானல் உள்ளே சென்று பயணித்து ஆய்வு செய்து படம் எடுக்கலாம். அங்கே செல்லும்போது மற்ற பகுதிகளில் நீங்க என்ன ஆளு என்று யாரும் கேட்க மாட்டார்கள். முதலில் சென்னையைப் பற்றி அடிப்படை வரலாற்று அறிவு வேண்டும். அவர்களின் வாழ்க்கை கலாச்சாரம் நுட்பமாக பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் சென்னையைப் பற்றி ஆய்வு செய்துள்ள எழுத்தாளருமான கௌதம சன்னா வட சென்னையைப் பற்றி வந்துள்ள தமிழ் சினிமாக்களைப் பற்றி  கூறுகையில், “முதலில் நான் வட சென்னை என்பதையே மறுக்கிறேன். நான் நார்த் மெட்ராஸ், வடக்கு மெட்ராஸ் என்றே குறிப்பிட விரும்புகிறேன். சென்னை என்ற வார்த்தையையே நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், சென்னை ஒரு தெலுங்கு வார்த்தை. உயர் நீதிமன்றத்துக்கு இந்த பக்கம் இருக்கிற நார்த் மெட்ராஸ்தான் ஒரிஜினல் மெட்ராஸ். இந்த படங்களில் காட்டுகிற எதுவுமே இந்த மக்களுடைய வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இல்லை. இவர்கள் நார்த் மெட்ராஸ் என்றால் இப்படிதான் இருக்கும் என்று ஒரு கற்பனையான கருத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றமாதிரி அவர்கள் ஒரு கதையை உருவாக்கி காட்டுகிறார்களே தவிர அவர்கள் காட்டுகிற எதுவுமே நார்த் மெட்ராஸுக்கான வாழ்க்கை கிடையாது. இரண்டாவது அதில் பயன்படுத்துகிற மொழிநடை நார்த் மெட்ராஸ்காரர்கள் இப்படிதான் பேசுவார்கள் என்று ஒரு கற்பனையான மொழிநடை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது நார்த் மெட்ராஸ் மொழி நடை கிடையாது. அதை செல்லுலாய்ட் மெட்ராஸ் லாங்குவேஜ் என்று சொல்லலாம். அதற்கு முன்னாடி கமல்ஹாசன், லூஸ் மோகன், சோ இவர்கள் எல்லாம் மெட்ராஸுக்கு ஒரு லாங்குவேஜ் உருவாக்கினார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் இது.

மெட்ராஸ் படத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருக்கிற விஷயங்களை ஓரளவு தொட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் எப்படி வன்முறைக்கு போகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அது பரவாயில்லை.

மெட்ராஸ் தொடர்பாக வந்துள்ள பெரும்பாலான படங்களைப் பார்த்து நான் பெரும்பாலும் ஏமாற்றமே அடைந்துள்ளேன். மனம் வருத்தம் அடைகிறது. மெட்ராஸிலேதான் இருக்கிறார்கள். இங்கே இருக்கிற மக்களைப் பற்றி ஒரு ஆய்வு செய்து இவர்களால் ஒரு படம் எடுக்க முடியவில்லை. மெட்ராஸ் பற்றி படம் எடுக்கும்போது எப்போதும் வன்முறை, கஞ்சா, குடி, விபச்சாரம் என்றே காட்டுகிறார்கள். இவர்கள் இவை எல்லாம் மெட்ராஸில் எந்த இடத்தில் இருக்கிறது என்று எனக்கு குறிப்பிட்டு காட்ட முடியுமா?

இந்த மக்களுடைய பண்பாடு இரண்டு விதத்தில் இருக்கும். இவர்களுடைய பண்பாடு இசை அடிப்படையிலான பண்பாடு. எந்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு பாட்டு, கச்சேரி கண்டிப்பாக இருக்கும். இசை என்றால் நாம் பொதுவாக தென் சென்னையில் இருக்கிற, மைலாப்பூர், மாம்பலத்தில் இருக்கிற இசைதான் என்று நினைக்கிறோம். அவர்களுடைய இசை ஒரு ஆட்டம் பாட்டமான வாழ்க்கை முறை. இரண்டாவது இவர்கள் ரொம்ப வெளிப்படைத் தன்மையானவர்கள். இவர்கள் அடுத்தவர் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற மன நிலை இல்லாத மக்கள். அப்படி இருந்ததால்தான் நார்த் மெட்ராஸை குறிவைத்து முதலில் வந்தவர்கள் வட இந்தியர்கள். பெரும்பாலான சொத்துகள் இப்போது அவர்களுடைய கைகளில் போய்விட்டது. அடுத்து தென் மாவட்டத்தில் இருந்து வந்த வணிக சாதிகள்.  இந்த இரண்டு தரப்பிடம்தான் நார்த் மெட்ராஸின் பெரும்பாலான சொத்துகள் இருக்கின்றன. ஆனால், பூர்வகுடி மக்கள் அந்த காலத்தில் என்ன சொத்து வைத்திருந்தார்களோ அதே அளவில்தான் சொத்துதான் இப்போதும் வைத்திருக்கிறார்கள். இன்னொரு விஷயம், இந்த பக்கம் இந்து – முஸ்லிம்கள் இருவருக்குமே ஒரே வாழ்க்கை முறைதான். மற்ற இடங்களில் இந்து – முஸ்லிம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். இங்கே ஒற்றுமை என்று கூற கூடாது, ஏனென்றால் இந்து – முஸ்லிம் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையாக இருப்பாதால் அவர்கள் பழகுவதில் எதிலுமே வித்தியாசமே இருக்காது. மதம்தான் வேறே தவிர வேறு எந்த வித்தியாசமும் அவர்களுக்கு இடையே கிடையாது.

நார்த் மெட்ராஸ் மக்கள் திருவிழாக்களை எப்படி கொண்டாடுகிறார்கள், அவர்கள் மத்தியில் கிறிஸ்த்தவம் எப்படி வளர்ந்திருக்கிறது  என்பது பற்றி எதையுமே சினிமாக்கார்கள் காட்டுவதில்லை. சினிமாக்காரர்கள் நார்த் மெட்ராஸ் மக்களின் விழுமியங்களை காட்டுவதே இல்லை. அவர்களுக்கு சினிமாவை விருவிருப்பாக காட்ட வன்முறை தேவைப்படுகிறது. அதற்கு இந்த மக்கள் பொருத்தமாக இருப்பதாக நம்புகிறார்கள். அதனால்,  மெட்ராஸ் படத்தை தவிர்த்து இந்த படங்கள் எதுவுமே மெட்ராஸ் பற்றி காட்டவில்லை.”  என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Writers criticism on portrait about north madras in tamil cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X