கோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியது உண்மையா? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்! தமிழிசை ஆதரவு

மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்று சிந்திக்காமல், ஆட்சியை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியை மட்டுமே திமுக செய்கிறது

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பும், கூட்டணி ஆலோசனைகளும் தமிழக அரசியலில் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.கவுக்கு எதிரான பேரணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

வருகின்ற 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்த வருகை நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமையும் என பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். இப்படியான பரபரப்புக்கு இடையே தலைமைச் செயலகத்தில் சப்தமில்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சேம்பரில் யாகம் நடத்தியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து நேற்று மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என தகவல் வந்துள்ளது.

எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதலமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

யாகம் நடத்தியதாக கூறப்படும் செய்தி குறித்தும், அதற்கு ஸ்டாலினின் கருத்து குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “வீணான வதந்தி பரவியிருக்கிறது. யாரோ வேண்டுமென்றே வதந்தியை கிளப்பிவிட்டு இருக்கிறார்கள். துணை முதல்வர் ஓ.பி.எஸ் யாகம் நடத்தியதை யார் பார்த்தது? ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? எந்த ஆதாரமும் இல்லாத போது, இதுபோன்ற வதந்திகளுக்கு எப்படி நான் கருத்து தெரிவிக்க முடியும்?. அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும், ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் எதிரிக்கு எதிரி நண்பனாக இருக்கக்கூடிய டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வும் சேர்ந்து செய்கிற சதி தான் இது. அவர்களால் எங்கள் ஒற்றுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு கலைந்துவிடும், நாளை கலைந்துவிடும் என்று சொல்லி, சொல்லி அவர்கள் வாய் தான் ஓய்ந்துபோய் இருக்கிறது. கடல் அலை ஓய்ந்துவிடப் போவதில்லை, அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியும் மக்கள் மனதில் நின்று, இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசு இது தான்.

எனவே இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவருகிறார்கள். மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்பதை சிந்திப்பதை விட்டுவிட்டு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி வலை பின்னுவதிலேயே தி.மு.க.வின் யோசனையும், செயலும் இருந்துவருகிறது” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “கோட்டையில் யாகம் நடத்தியிருந்தால் தவறு இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close