அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும் என ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய துணை முதல்வர், எங்களை போன்ற நல்ல அரசியல் வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார்.
அதன்பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்திய அளவில் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும். ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவின் கீழ், 100 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் அப்போது பழனிசாமி அறிவித்தார்.
"இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஆண்டின் ஒரு தேதியை ஐநா சபை அறிவிக்க வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, ஜூன் 1-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிர்த்தி இராணி அறிவித்தார். ஆனால், யோகாவை நாங்கள் எதிர்க்கவில்லை. அதன் மூலமாக மதவாதத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
தமிழகத்தில் ஆளும் அதிமுக-வை மத்திய பாஜக பின்னின்று இயக்கி வருகிறது என புகார்கள் எழுந்து வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.