ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகளும் இணையாது என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் பேசி வரும் நிலையில், ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் மறைவையடுத்து, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிளவு பட்ட அதிமுக, ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்தது. அதன்பின்னர், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும், அதிகார மோதல் காரணமாக தற்போது இரு அணிகளாக மீண்டும் பிளவு கண்டுள்ளது. அக்கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அம்மா அணி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுக்குள் உள்ளது.

இந்த இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இரு அணிகள் தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் குழு கலைக்கப்பட்டது தான் மிச்சம், பேச்சுவார்த்தையில் எள்ளளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சி மற்றும் கட்சி மற்றும் ஆட்சித் தலையீடுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எடப்பாடி அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, இரு அணியினரும் இருவேறு கருத்துக்களை கூறி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் திமுகவில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது அதற்கு முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் தற்போது சச்சரவுகள் இருக்கலாம், ஆனால் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை காணத்தான் போகிறீர்கள். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் போதுமான அளவு மழை இல்லாததால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்த முதல்வர், குடிநீர் பிரச்னையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

×Close
×Close