நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, ‘நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ள மாட்டேன்’ என்று திட்டவட்டமாக கூறினார்.
இது தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதையடுத்து, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களையும் தாண்டி பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் பிரமுகர்கள் அவரிடம் நேரிலும், போனிலும், சிலர் கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி வருகின்றனர்.
அதிமுக தமிழகத்தில் மீண்டும் தலை தூக்க முடியாது என்பதை அமைச்சர்கள் பலரும் உணர்ந்து இருக்கிறார்கள். இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த இரண்டு அணிக்குள்ளும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி தரப்பு மத்திய அரசிடம் தஞ்சம் அடைந்ததை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. இன்னமும் திவாகரனின் ஆதிக்கம் கட்சியில் இருப்பதாக சொல்கிறார்கள். இதுவும் அதிருப்திக்கு காரணம்.
அதே நேரத்தில் திமுகவிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் செயல்படவில்லை என்ற வருத்தம் கட்சியினரிடையே இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே 1996ம் ஆண்டு ரஜினி ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களில் பலர் இன்னமும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால், அரசியல் அவரை சுற்றியே இருக்கும் என்று அவர்களும் கருதுகிறார்கள். அவர்களும் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலமாக ரஜினியை கட்சி ஆரம்பிக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். தனி கட்சி ஆரம்பியுங்கள். எந்த கட்சியிலும் இணைந்துவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லி வருகின்றனர்.
அதே போல காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதே போல பலவேறு கட்சிகளிலும் ரஜினிக்கு நெருக்கமான பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், ரஜினியை தனிக்கட்சி தொடங்குமாறு சொல்லி வருகின்றனர்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது. அரசியல் வாட்டாரங்களில், மக்கள் மத்தியில், சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள். எழுதுகிறார்கள் என்பது குறித்து தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் தனது நண்பரும் ரசிகர் மன்ற நிர்வாகியுமான சுதாகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். அரசியல் கட்சிகளில் இருந்து யார் யார் தொடர்பு கொண்டார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வதோடு, அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா? என்பதையும் விசாரிக்க சொல்லியிருக்கிறாராம்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் வீட்டுக்கும், ராகவேந்திரா மண்டபத்திற்கும் நிறைய கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளதாம். பெரும்பாலான கடிதங்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துபவையாகவே இருக்கிறது. கபாலி படத்துக்குப் பின்னர் தலித் கிராமங்களில் இருந்து ரஜினிக்கு ஏராளமான கடிதங்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. சிலர் ஆர்வ மிகுதியால் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்புகிறார்களாம். அவர்கள் அனைவருமே ரஜினியை தனிக்கட்சி ஆரம்பிக்க சொல்லி வலியுறுத்துகிறார்கள். முக்கியமான கடிதங்கள் ரஜினி வசம் கொடுக்கப்படுகிறதாம். அவர் அதைப் படித்துவிட்டு, வழக்கம் போல தனது டிரேட் மார்க் புன்னகையை மட்டும் உதிர்க்கிறாராம்.