/tamil-ie/media/media_files/uploads/2017/06/a441.jpg)
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மூத்தவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை திருப்பத்தூர் எலவம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு மணமக்களுக்கு அலங்காரம் செய்து, அவர்களை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
ஐயர் மந்திரம் முழங்கி ‘‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’’ என தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்தபோது, அருகில் நின்றுக் கொண்டிருந்த மணமகனின் தம்பி திடீரென மாப்பிளையை (அண்ணனை) மணமேடையில் இருந்து தள்ளிவிட்டார். என்ன நடக்கிறது என்று அனைவரும் சுதாரிப்பதற்குள், தனது கையில் வைத்திருந்த தாலியை மணமகள் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தாலி கட்டிய மணமகனின் தம்பியை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் எதற்காக இப்படி செய்தாய்? என அவரிடம் கேட்டதற்கு, "அண்ணனுக்கு பெண் பார்க்க சென்றபோது அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. அப்போது இருந்தே நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கி விட்டோம்" என்றார். இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த உறவினர்கள், மணபெண்ணையும் தாக்கினர்.
சற்றும் எதிர்பார்க்காத இந்த சம்பவத்தையடுத்து, அங்கு மணக்கோலத்தில் நின்றுக் கொண்டிருந்த அண்ணன், தான் அணிந்திருந்த வேட்டி, சட்டையை கிழித்துவிட்டு, அழுதபடி கோவிலை விட்டு வெளியேறினார். ஆனால் அதனை எதுவும் பொருட்படுத்தாத புது திருமண ஜோடி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.