தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீச்சு... 17 வயதுடையவர்கள் செய்யக் கூடிய செயலா?

பாகூர் ஏரிக்கரை அருகே நேற்றிரவு சுவேதன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்....

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுவேதன் (17) என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த சுவேதன் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

இந்நிலையில், பாகூர் ஏரிக்கரை அருகே நேற்றிரவு சுவேதன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது சுவேதன் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவரது தலையை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், வெட்டப்பட்ட சுவேதன் தலையை, புதுச்சேரி எல்லையில் இருக்கும் ரெட்டச்சாவடி காவல்நிலையத்தில் ஒரு கும்பல் வீசிச் சென்றது.

இதைத் தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், இப்படுகொலை தொடர்பாக வினோத், தாஸ் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைதான இருவரும் 17 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
(துண்டிக்கப்பட்ட தலை போலீஸ் நிலையத்தில் வீசும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

×Close
×Close