தமிழகத்தில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல்: அறிகுறிகளும் பின்னணியும்

தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள் கிழமை தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த இளைஞரின் உடல் நலம் தேறி வருவதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இருப்பினும், அந்த இளைஞரின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அந்த இளைஞருக்கு காய்ச்சல், கண் சிவப்பாவது, மூட்டு வலி பிரச்சனைகள் இருந்துவந்தது. இதனால், அவர் அஞ்சட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருடைய ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும், 4 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் யாருக்கும் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இல்லை எனவும், பாதிக்கப்பட்ட இளைஞரின் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என கூறப்படும் நிலையில், அந்த வைரஸ் அவரை எவ்வாறு பாதித்தது எனவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் இருந்து, அமெரிக்கா, ஆசியாவிற்கு இந்த நோய் தாக்குதல் பரவியது. இதனால், மக்கள் பீதியடைந்த நிலையில், இந்தியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அகமதாபாத்தில் உள்ள இருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கர்ப்பிணி ஒருவரும் இதனால் பாதிக்கப்பட்டார். ஆனால், ‘ஜிகா’ வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டதை கடந்த மே மாதத்தில் தான் மத்திய சுகாதார துறை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

’ஜிகா’ வைரஸ் எவ்வாறு தாக்குகிறது?

1947-ஆம் ஆண்டில் உகாண்டாவில் உள்ள ‘ஜிகா’ எனும் காடுகளில் ஏதிஸ் வகை கொசுக்களால் இந்த வைரஸ் தாக்குதல் பரவுவது கண்டறியப்பட்டது. முதலில் குரங்குகளில் மட்டுமே இந்த தாக்குதல் கண்டறியப்பட்ட நிலையில், 1952-ஆம் ஆண்டில் மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் உறவு, பாதிக்கப்பட்ட தாயின் மூலம் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு, ரத்தத்தின் மூலம் இந்த தாக்குதல் பரவுகிறது.

’ஜிகா’ வைரஸ் அறிகுறிகள்:
லேசான காய்ச்சல், தோல் அரிப்பு, தோலில் வெண்படலம், மூட்டு வலி, தசைகளில் வலி, தலைவலி, உடல் சோர்வு ஆகியவை ‘ஜிகா’ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

நோய் தடுப்பு:

இதனை முழுமையாக குணப்படுத்த தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுதான் அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை அடிப்படையில் தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

×Close
×Close