இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ தனது 5ஜி சேவையை முதற்கட்டமாக தொடங்கியுள்ளன. படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவதும் அதிகரிக்கும். தங்களது போனை 5ஜிக்கு மேம்படுத்த வேண்டும் எனப் பலர் நினைப்பர். அந்த வகையில் 5ஜி ஸ்மார்ட் போன் வாங்குவது குறித்து நீங்கள் கவனிக்க வேண்டிய சிலவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.
5G ஸ்மார்ட்போன் பிளஸ்
5ஜி ஸ்மார்ட்போன் வெறும் 5ஜி நெட்வொர்க்குகளை மட்டும் ஆதரிக்கவில்லை. எதிர்காலத் தேவைகளையும் அது பூர்த்தி செய்யும். சாப்ட்வேர் அப்டேட், மேம்பட்ட அம்சங்கள், சிறந்த கேமரா வசதி, சிறந்த செயல்திறன் கொண்டிருக்கும்.
5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரிக்கும் மேம்பட்ட சிப்செட் பொறுத்தப்பட்டிருக்கும். 5ஜி போன்கள் தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது.
இதையும் படிங்க
வேகமான டேட்டா
உங்கள் பகுதியில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றால் நிச்சயம் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறலாம். வேகமான டேட்டா அனுபவங்களை பெற விரும்புபவர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்தலாம். 5ஜி தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் 4ஜியை விட வேகமாக உள்ளது, வருங்காலங்களில் சிறப்பாக செயல்படும். 4ஜியை விட டேட்டா வேகத்தை உணர்வீர்கள். உயர்தரத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யமுடியும்.
5G ஸ்மார்ட்போன் இப்போது வேண்டாமா?
புது 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது வேண்டாம் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் பகுதியில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சில மெட்ரோ நகரங்களில் அதுவும் குறிப்பிடத்தகுந்த பகுதிகளில் தான் 5ஜி சேவை வழங்குகின்றன. நாடு முழுவதும் சேவையை விரிவுபடுத்த இன்னும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். அதனால் இப்போது 5ஜி ஸ்மார்ட்போனில் செலவிடுவது குறித்து யோசிக்க வேண்டும்.
இப்போது 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது இன்னும் சில மாதங்களில் உங்கள் பகுதியில் 5ஜி சேவை கிடைக்கும் போது உங்கள் போன்களில் அப்டேட்கள் கிடைப்பது சற்று கடினமாக இருக்கலாம். மேலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விலை தற்போது அதிகமாக இருக்கும். அனைத்து பகுதிகளிலும் சேவை விரிவுபடுத்தும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், 5ஜி டேட்டா பேக் திட்டங்கள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பின்னர் விலை உயர வாய்ப்பு உள்ளது. 5ஜி சேவை பரவலாக விரிவுபடுத்தப்படும்போது 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சேவை அனுபவத்தை பெற முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil