இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தினார். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் சோதனை அடிப்படையில் 2 நிறுவனங்களும் சேவை வழங்குகின்றன.
5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் அதன் தற்போதைய நிலை, அப்டேட் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் 5ஜி
இந்தியாவில் 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதில் ஏர்டெல், ஜியோ தங்கள் பயனர்களுக்கு 5ஜி சேவை வழங்குகின்றன. வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் குறித்த அப்டேட்டை இன்னும் வழங்கவில்லை. ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையானது, தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க்கின் உள்கட்டமைப்பில் செயல்படும் நான்-ஸ்டேன்ட்அலோன் முறையில் சேவை வழங்குகிறது. அதேசமயம் ஜியோவின் ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க் பிரத்யேகமான கருவி மூலம் இயங்கும் ஸ்டேன்ட்அலோன் முறையில் செயல்படுகிறது.
எந்தெந்த நகரங்களில் 5ஜி சேவை
இந்தியாவில் உள்ள Tier I நகரங்களில் பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. படிப்படியாக Tier II, III நகரங்களில் சேவை விரிவுபடுத்தப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏர்டெல் மற்றும் ஜியோ 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்க திட்டமிட்டுள்ளன.
ஏர்டெல் முதலில் தனது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை 8 நகரங்களில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் ஜியோ 4 நகரங்களில் ட்ரூ 5ஜியை அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில் நிறுவனங்கள் தற்போது மேலும் சில நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளன.
ஏர்டெல்
ஏர்டெல் 5ஜி தற்போது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம் மற்றும் கவுகாத்தி ஆகிய 11 இடங்களில் கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மெட்ரோ நகரங்களிலும், 2023 இறுதிக்குள் அனைத்து முக்கிய நகரங்களிலும் 5ஜி சேவையை கொண்டு வர இருப்பதாக ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ
ஜியோ 5ஜி தற்போது டெல்லி NCR, மும்பை, வாரணாசி, நாத்வாரா, புனே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 9 இடங்களில் கிடைக்கிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள 33 மாவட்ட தலைநகரங்களிலும் ஜியோ ட்ரூ 5ஜி சேவை வழங்கப்படும் என நேற்று (நவம்பர் 25) அறிவிக்கப்பட்டது.
எந்தெந்த போன்களில் 5ஜி பயன்படுத்தலாம்?
5ஜி இணையசேவை வழங்கப்பட்டாலும், உங்கள் போனில் 5ஜி ஆதரவு உள்ளதா? அதாவது 5ஜி பயன்படுத்த முடியுமா? என்பதை பார்க்க வேண்டும். சில போன்களில் 5ஜி சேவையை நேரடியாக பயன்படுத்தலாம். சில போன்களில் 5ஜி சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு பயன்படுத்த வேண்டும்.
Xiaomi, Realme, Nothing, Oppo போன்ற பிராண்ட் போன்களில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி, ஜியோ 5ஜி,
சேவைகளை ஆதரிக்கும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ( Google) போன்களில் இன்னும் சாப்ட்வேர்
அப்டேட் வழங்கப்படவில்லை. ஆப்பிள் iOS பீட்டா பயனர்களுக்கு மட்டும் சாப்ட்வேர்
அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பயனர்களுக்குமான நிலையான அப்டேட் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு இந்த மாதம் 5ஜி ஆதரவு சாப்ட்வேர் அப்டேட் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil