ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.500 விலையில் ஃபீச்சர் போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக எச்.எஸ்.பி.சி தெலைதொடர்பு துறை ஆய்வாளர் ராஜிவ் சர்மா கூறும்போது: ரிலையன்ஸ் ஜியோவானது ரூ.500 என்ற மலிவான விலையில் 4 ஜி VoLTE அம்சத்துடன் கூடிய போனை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறினார்.
2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி பக்கம் இழுக்கும் வகையில், இந்த நடிவடிக்கையை ஜியோ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, ஜியோ நிறுவனம் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கிட்டத்தட்ட 2 கோடி போன்களை ஆர்டர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஜூலை மாத இறுதியில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் ஜியோவின் ஃபீச்சர் போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கிக்கின்றன. எனினும், இது தொடர்பாக ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அந்த தகவலையும் வெளியிடவில்லை.
சமீபத்தில் லாவா, மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் 4ஜி அம்சத்துடன் கூடிய ஃபீச்சர் போனை வெளியிட்டன. ஆனாலும், அந்த நிறுவனங்கள் வெளியிட்ட ஃபீச்சர் போனின் விலை ரூ.3000 முதல் அதற்கு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், ரூ.500 என்ற மலிவான விலையில் ஜியோ ஃபீச்சர் போனை வெளியிடும் பட்சத்தில், அது மற்ற நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், ஜியோ 4ஜி VoLTE சேவையை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு இலவச கால்கள், டேட்டாவுடன் தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமாகி அதிரடி காட்டிய ஜியோ, ஏற்கெனவே 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளது. ஜியோ வருகையினால் மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அதிரடி ஆஃபரையும் வழங்கி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.