ISRO'S Aditya L1 Mission update: 11 நாட்களுக்கு முன்பு பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து பிரிந்து சென்ற ஆதித்யா எல். 1 விண்கலம் நேற்று பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறி அதன் இலக்கான எல் 1 புள்ளியை நோக்கி தொடர்ந்து பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் விண்கலம் பூமியில் இருந்து இதுவரை 9.2 லட்சம் கி.மீ தூரம் கடந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆதித்யா எல். 1 விண்கலம் செப்டம்பர் 19-ம் தேதி பூமியின் சுற்றுப் பாதையை விட்டு வெளியேறியது. இந்நிலையில் நேற்று இஸ்ரோ வெளியிட்ட' X' பதிவில், "விண்கலம் பூமியில் இருந்து இதுவரை 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறியது. அது இப்போது சூரியன்-பூமி இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி பயணத்து வருகிறது.
இஸ்ரோ பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியே ஒரு விண்கலத்தை அனுப்புவது இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும். முதல் முறையாக செவ்வாய் சுற்றுப் பாதை மிஷனில் இவ்வாறு செய்தது என்று கூறியுள்ளது.
ஆதித்யா எல். 1 இந்தியாவின் சூரிய ஆய்வுத் திட்டமாகும். செப்டம்பர் 2-ம் தேதி அனுப்பபட்ட விண்கலம் சூரியன்-பூமி இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் 110 நாட்களுக்கு மேல் பயணம் இந்த இலக்கை அடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“