ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து அரசியல் தலைவர்கள், பல துறை நட்சத்திரங்கள் பயன்படுத்தும் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளமும் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ட்விட்டரைப் போல் இன்ஸ்டாகிராமும் பிரபலமான சமூக வலைதளமாகும். இத்தளத்தை குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு பிடித்த திரைப்பட நட்சத்திரம், கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் மற்றும் பல துறை பிரபலங்களை பின்தொடர்ந்து வருகின்றனர். பிரபலங்கள், நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ரிவர்ஸ் இன்ஜினியர் அலெக்ஸாண்ட்ரோ பலுஸி வெளியிட்ட குறிப்பு படி, இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் மாதக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும் என எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. தற்போது வரை இன்ஸ்டாகிராம் நிறுவனம் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனம் தனது வெப் ப்ளூ டிக் பயனர்களிடையே மாதம் 8 அமெரிக்க டாலர் ரூ. 661.24 கட்டணமாக வசூலித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த ப்ளூ டிக் புதிய கட்டண வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் இந்த புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil