இந்தியாவின் முதல் 5ஜி வயர்லெஸ் வைஃபை தீர்வாக, ஏர்டெல் நிறுவனம் டெல்லி மற்றும் மும்பையில் 5ஜி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையான வயர்லெஸ் அணுகல் (எஃப்.டபிள்யூ.ஏ) சலுகையான எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் 100Mbps வேகத்தை வயர்லெஸ் முறையில் வழங்குகிறது.
எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் மூலம் இயக்கப்படும் இந்த தொழில்நுட்பம் ஸ்டாண்ட் அலோன் பிளக்-அண்ட்-ப்ளே சாதனமாக உள்ளது. ஏர்டெல் வைஃபை 6 பயன்படுத்தி பரந்த நெட்வொர்க் கவரேஜ் உடன் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் 64 சாதனங்களில் அதிவேக இணையத்தை அணுகலாம். மேலும் அனைத்து எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் வன்பொருள் சாதனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வீட்டில் வைஃபைக்கான தேவை அபரிமிதமாக வளர்ந்துள்ளதாக ஏர்டெல் கூறுகிறது, மேலும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் முன்முயற்சியுடன், ஃபைபர் நெட்வொர்க் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களிலும் வைஃபை போன்ற வேகத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. தற்போது டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் விலை விவரங்கள்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் மாதத்திற்கு ரூ.799 செலவாகும், மேலும் வன்பொருள் பாகத்திற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.2,500 செலுத்தி, ரூ.4,435க்கு (7.5 சதவீத தள்ளுபடி உட்பட) ஆறு மாத காலத்தை ஒருவர் வாங்கலாம். தற்போது, ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறதா அல்லது பிராட்பேண்ட் திட்டங்களைப் போலவே கேப் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
5ஜி அடிப்படையிலான நிலையான வயர்லெஸ் அணுகல் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஏர்டெல் என்றாலும், ஜியோ சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சேவையை ஜியோ ஏர்ஃபைபர் அறிவித்தது. இது 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஜிகாபிட் வேக இணைய அணுகலை வழங்குவதாகவும் கூறுகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, ஜியோ ஏர்ஃபைபரின் விலை அல்லது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“