ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்களை சமாளிக்கும் வகையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், ரூ.999-ல் “தன் தனா தன்” ப்ளானை ஜியோ வழங்கி வரும் நிலையில், ரூ.999-ல் ஏர்டெல் நிறுவனமும் ஆஃபரை அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ.999 ப்ளானில் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி கால்ஸ் மற்றும் 50 ஜி.பி 4ஜி/3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ப்ளானில் பயன்படுத்தப்படாத மீதமுள்ள டேட்டாவை, அடுத்த மாதத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் வகையில் ரோல்ஓவர் செய்யப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும், அன்லிமிடெட் கால்ஸ் வசதியானது ரோமிங் சயமத்திலும் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள ஏர்டெல், இந்த ஆஃபர் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பழைய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ரூ.999 ப்ளானை வழங்குகிறது. அதன்படி, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ் வழங்குவதோடு, நாள்தோறும் 4ஜி.பி, 3ஜி/4ஜி டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்குகிறது. அதிக விலையில் உள்ள இந்த ப்ளானானது, அதிக டேட்டாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 தன் தனா தன் ப்ளானில், 90 ஜி.பி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை ஜியோ ரூ.999 ப்ளானில் அடக்கம். குறிப்பிடும்படியாக, ஜியோவின் இந்த ப்ளானில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே பயனைத் தான் பெறுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜியோபோன் அறிவித்திருந்த நிலையில், அதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.1399-ல் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு முதலில், ரூ.2,899 செலுத்த வேண்டும் என்றும், பின்னர் ரூ.1500 தொகை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்தது. இதற்காக கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், ரூ.169 -க்கு ப்ளானையும் ஏர்டெல் அறிமுகம் செய்தது. ரூ.1500 கேஷ்பேக் பெற வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் 36 மாதங்களில் ரூ.6000-க்கு ரீசார்ச் செய்திருக்க வேண்டும் என்பது ஏர்டெல் நிறுவனத்தின் நிபந்தனையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.