அமேசான் பிரைம் இந்தியாவில் உள்ள பிரபலமான ஓ.டி.டி தளங்களில் ஒன்று. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. 1 மாதம், 3 மாதம், 1 வருடம் என சந்தா திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகம் பேர் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான 2 சந்தா திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதாவது 1 மாதம் சந்தா திட்டம் மற்றும் 3 மாத சந்தா திட்டத்தின் விலையை உயர்த்தி உள்ளது.
மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.179-ல் இருந்து ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் 3 மாத சந்தா விலை ரூ.599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு சந்தாவில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.1,499 ஆகவே தொடர்கிறது.
1 மாதம் மற்றும் 3 மாத சந்தா கட்டணம் உயர்த்தியதன் மூலம் அமேசான் இந்தியா ஒரு வருட சந்தா திட்டத்திற்கு பயனர்களை மாறும்படி மறைமுகமாக கூறுகிறது.
அமேசான் பிரைம் இந்தியா நிறுவனம் அண்மையில் ஆண்டுக்கு ரூ.999க்கு என்ற விலையில் பிரைம் லைட் மெம்பர்ஷிப் திட்டத்தை
அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் 2 பேர் பயன்படுத்தலாம். SD தரத்தில் பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது, அத்துடன் இலவச இரண்டு நாள் டெலிவரியையும் வழங்குகிறது. இருப்பினும், இது பிரைம் மியூசிக் ஸ்ட்ரீமிங் அல்லது வழக்கமான பிரைம் சந்தா போன்ற பிரைம் கேமிங் நன்மைகளை வழங்கவில்லை.
புதிய விலை பட்டியல்
அமேசான் பிரைம் 1 மாத சந்தா: ரூ. 299
அமேசான் பிரைம் 3 மாத சந்தா: ரூ. 599
அமேசான் பிரைம் ஆண்டு சந்தா: ரூ. 1,499
அமேசான் பிரைம் லைட் சந்தா: ரூ 999
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“