செல்ஃபோன் நிறுவனங்களின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், ஐஃபோன் எக்ஸ், ஐஃபோன் 8, ஐஃபோன் 8 ப்ளஸ் ஆகிய ஐஃபோன்களை புதிதாக கலிஃபோர்னியாவில் கட்டப்பட்ட ஆப்பிள் அரங்கத்தில் அறிமுகம் செய்தது.
இதில், ஐஃபோன் எக்ஸ் இந்நிறுவனத்தின் முந்தைய ஐஃபோன்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. முன்பக்கம் முழுவதுமே காட்சித்திரையாக இருக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம், முகத்தை ஸ்கேன் செய்து அடையாளமாக ஏற்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த ஐஃபோனில் இடம்பெற்றுள்ளது. ஐஃபோன் செல்பேசி வெளியீட்டின் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த ஐஃபோன் எக்ஸ் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் ஐஃபோன் செல்பேசி 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஐஃபோனின் முன்பக்கம் முழுவதும் காட்சித்திரையாக இருக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் தான் இதன் சிறப்பம்சம். ஓ.எல்.இ.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட எச்.டி. சூப்பர் ரெட்டினா காட்சித்திரை, 2436*1125 பிக்சல் அளவுக்கு தெளிவுத்திறன் கொண்ட திரையை உடையது இந்த ஐஃபோன் எக்ஸ். இந்த சூப்பர் ரெட்டினா காட்சித்திரை எச்.டி.ஆர். 10 மற்றும் டால்பி விஷன் வியூவிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஐஃபோனின் முழு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தையும் மாற்றி வெளியிடப்பட்ட முதல் ஐஃபோன் இதுவாகத்தான் இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டில் ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 ப்ளஸ் ஆகிய ஐஃபோன்களை முந்தைய ஐஃபோன்களிலிருந்து மாற்றி பெரிய திரையுடன் வடிமைத்ததே, அந்நிறுவனம் செய்த மாற்றமாக கருதப்பட்டது.
இந்த ஐஃபோனின் உள்ளே செல்ல ஹோம் ஸ்கிரீனில் எந்தவொரு பட்டனும் இருக்காது. நமது முகத்தை ஸ்கேன் செய்து அதனை அடையாளமாக ஏற்று மட்டுமே ஐஃபோனின் உள்ளே செல்ல முடியும். இந்த ஐஃபோன் உரிமையாளரின் முகத்தை ஏற்றால் மட்டுமே, இந்த ஐஃபோன் ‘அன்-லாக்’ செய்யப்படும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மற்றவர்கள் இந்த ஐஃபோனை ‘அன்-லாக்’ செய்வதற்கான வாய்ப்பு மில்லியன் பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே அமையும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மட்டுமின்றி, வழக்கமான ‘பாஸ்வேர்ட்’ முறையிலும் இதனை அன்-லாக் செய்ய முடியும்.
ஏ 11 (பையோனிக் சிப்) ப்ராசஸர் சிப், ஐஃபோன் 7-ஐ விட 70 சதவீதம் வேகமானது. 12 எம்.பி. அளவுடைய இமேஜ் சென்சாரானது, f/1.8 அபெர்ச்சர் வைட்-ஆங்கிள், f /2.4 அபெர்ச்சர் டெலிஃபோட்டோ லென்ஸ்களை கொண்டது. இரண்டு லென்ஸ்களும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் குவாட் - லெட் ட்ரூ டோன் ஃப்ளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், 7 எம்.பி. திறனுடைய ட்ரூ-டெப்த் கொண்ட முன்பக்க கேமராவானது, போர்ட்ரெய்ட் செல்ஃபி எடுக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 7-ஐ விட, ஐஃபோன் எக்ஸ்-ன் பேட்டரி இரண்டு மணிநேரம் அதிகமாக நீடிக்கவல்லது. ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் ஐஃபோன்களை போலவே, இதிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. 64 ஜிபி மற்றும் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டது.
இவ்வளவு வசதிகள் இருக்கின்றதே, சீப்பாகவா இதன் விலை இருக்கும்? இதன் விலை 999 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பின்படி, ரூ.65,000. அக்டோபர் 27-ஆம் தேதி முதல் இந்த ஐஃபோனுக்கான ப்ரீ-புக்கிங் துவங்குகிறது. அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் ஷிப்பிங் ஆரம்பிக்கிறது.