ஐபோன் பயனர்கள் 5ஜி சேவை பயன்படுத்த ஏதுவாக வருகிற டிசம்பர் மாதம் மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளன. படிப்படியாக நாடு முழுவதும் சேவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளன.
முதற்கட்டமாக ஜியோ 4 நகரங்களிலும், ஏர்டெல் ஒரு படி மேலாக 8 நகரங்களிலும் சேவையைத் தொடங்கியுள்ளன. சேவை தொடங்கப்பட்டாலும், மொபைல் போன்களில் மென்பொருள் அப்டேட் செய்யப்படாததால் 5ஜி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட நகரங்களில் சேவை தொடங்கினாலும் அங்குள்ள நபர்களாலும் 5ஜி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரணம் ஆப்பிள் மற்றும் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி பயன்படுத்தக் கூடிய வகையில் மென்பொருள் அப்டேட் செய்யவில்லை. சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே நேரடியாக 5ஜி பயன்படுத்த முடியும். மற்றவற்றில் அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும்.
அந்தவவையில் இந்தியாவில் ஐபோன் பயனர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5ஜி மென்பொருள் அப்டேட் (software update) வழங்க உள்ளதாக ஆப்பிள் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இந்திய அரசு உயர் அதிகாரிகள் ஆப்பிள், சாம்சங் மற்றும் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களை சந்தித்து விரைவில் 5ஜி மென்பொருள் அப்டேட் வழங்கும்படி பேச திட்டமிட்டிருந்தனர்.
ஆப்பிள் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, "நெட்வொர்க் சரிபார்ப்பு, தரம், செயல் திறன் சோதனை நிறைவடைந்தவுடன் பயனர்களுக்கு 5ஜி மென்பொருள் அப்டேட் வழங்கப்படும். பயனர்களுக்கு சிறந்த சேவை அனுபவத்தை தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் சோதனை மேற்கொள்ள நேரம் எடுக்கிறது. தற்போது இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். டிசம்பர் மாதம் 5ஜி மென்பொருள் புதுப்பிப்பு (software update) வழங்கப்படும்.
ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் வகை போன்கள், ஐபோன் எஸ்இ iPhoneSE (3rd generation) போன் மாடல்களில் டிசம்பர் மாதம் அப்டேட் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“