நாசா விண்வெளி வீரர்கள் அரிசோனா பாலைவனத்தை ஆர்ட்டெமிஸ் III மூன்வாக்கிற்கான பயிற்சி மைதானமாக மாற்றியுள்ளனர். நாசா விண்வெளி வீரர்கள் ஆர்ட்டெமிஸ் பயணத்தின் போது மூன்வாக் செய்வதற்கு ஏதுவாக இங்கே பூமியில் பயிற்சி எடுக்கின்றனர். அரிசோனா பாலைவனத்தின் ஃபிளாக்ஸ்டாஃப் அருகே உள்ள எரிமலைக் களத்தில் நிலவுடன் ஒத்துக்போகும் தன்மை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வார கால கள சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
பயிற்சி விண்வெளி உடைகளை அணிந்து, நாசா விண்வெளி வீரர்களான கேட் ரூபின்ஸ் மற்றும் ஆண்ட்ரே டக்ளஸ் ஆகியோர் புதன்கிழமை கள ஆய்வை தொடங்கினர். பாலைவனத்தில் பல்வேறு தொழில்நுட்ப விளக்கங்கள், வன்பொருள் சோதனைகள் மற்றும் ஆர்ட்டெமிஸ் அறிவியல் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொண்டனர்.
ஒரு வார கால சோதனையில், விண்வெளி வீரர்கள், பொறியியலாளர்கள், கள வல்லுநர்கள், விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய இரண்டு ஒருங்கிணைந்த குழுக்கள் - களத்தை முழுவதுமாக ஆய்வு செய்வர்.
ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தின் கள சோதனைக்கான இயக்குனர் பார்பரா ஜனோய்கோ கூறுகையில், "ஆர்ட்டெமிஸ் பயணங்களின் போது வெற்றிகரமான சந்திர செயல்பாடுகளை நடத்துவதற்கு தேவையான அனைத்து அமைப்புகள், வன்பொருள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை சோதிக்க உதவுவதில் கள சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் சோதனைக்கான அறிவியல் அதிகாரி செரி அகில்லெஸ் கூறுகையில், "ஆர்ட்டெமிஸ் III-ன் போது, விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் நமது அறிவியல் ஆபரேட்டர்களாக இருப்பார்கள். பூமியில் இருந்து அவர்களுக்கு முழு அறிவியல் குழுவும் துணைபுரியும். இந்த உருவகப்படுத்துதல், நிகழ்நேரத்தில் தொலைதூரத்தில் இருந்து புவியியல் நடத்துவதைப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது ” என்றார்.
அரிசோனா பாலைவனம் அப்பல்லோ காலத்திலிருந்தே சந்திர ஆய்வுக்கான பயிற்சிக் களமாக இருந்து வருகிறது, ஏனெனில் சந்திர நிலப்பரப்பில் உள்ள பள்ளங்கள், வெடிப்புகள் மற்றும் எரிமலை அம்சங்கள் உட்பட பல ஒற்றுமைகள் இந்த பாலைவனத்தில் உள்ளன என விஞ்ஞானிகள் கூறினர்.
ஆர்ட்டெமிஸ் III
இரண்டு ஆர்ட்டெமிஸ் சோதனைப் பயணங்களைத் தொடர்ந்து, 2026-ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ட்டெமிஸ் III திட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில், கடுமையான நிலப்பரப்பு மற்றும் இதுவரை யாரும் செல்லாதபகுதியில் மனிதர்களை தரையிறக்கி வரலாறு படைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“