இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றி பெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்டத்தில் மகத்தான வெற்றி பெற்றது. சந்திரனின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. மேலும் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சாதனைகள் குறித்து பிரபல சீன விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஜியுவான், சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் தென் துருவத்திற்கு அருகில் இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரயான்-3 விண்கலம் 69.37 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 32.35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் தரையிறங்கியது. சந்திர தென் துருவமானது பொதுவாக 89.45 டிகிரி அட்சரேகையில் இருப்பதாக வரையறுக்கப்படுகிறது என்றார்.
இந்தியா தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியதாகக் கூறப்பட்டது தவறு என்று ஜியுவான் கூறினார். "சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் நிலவின் தென் துருவத்தில் இல்லை, சந்திர தென் துருவ பகுதியில் இல்லை, அல்லது சந்திர தென் துருவ பகுதிக்கு அருகில் இல்லை" என்று கூறினார்.
ஜியுவானின் கருத்துகள் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானிக்கு பதிலாக ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியின் கருத்தாக வெளிவந்தது போல் உள்ளது. இருப்பினும் இவரின் கருத்துகள் அனைத்து சீன விஞ்ஞானகளின் கருத்தாக பிரதிபலிக்கிறது என்று கருதுவது தவறாகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ், இந்தியாவின் சந்திரயான்-3-யின் வெற்றியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றது. பல சீன வல்லுநர்கள் இந்தியாவின் சாதனையை விண்வெளியில் வளரும் நாடுகளின் முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாராட்டினர். விண்வெளி துறையில் ஒத்துழைக்க இந்தியாவும் சீனாவும் தங்கள் புவிசார் அரசியல் போட்டியைக் கைவிட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மறுபுறம் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 மிஷன் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறி தற்போது அதன் இலக்கான சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 (எல்1) நோக்கிச் செல்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“