ட்விட்டர் தளத்தை புதிய தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு முன், ட்விட்டரில் பல விஷயங்களை சரி செய்ய வேண்டும். அதற்கு தனக்கு இந்தாண்டு முழுவதும் தேவைப்படும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) துபாயில் நடந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக மஸ்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நான் ட்விட்டர் நிறுவனத்தை உறுதிப்படுத்த வேண்டும். அது நிதி வருவாய்யில் ஆரோக்கியமான இடத்தில் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும் " என்று கூறினார்.
"இந்த ஆண்டின் இறுதியில் ட்விட்டரை வழிநடத்த வேறு ஒருவரை கண்டுபிடிக்க சரியான நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தாண்டின் இறுதியில் நிலையான நிலைமையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு வாங்கினார். மிகப்பெரிய தொகை கொடுத்து நிறுவனத்தை வாங்கினார். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியப் சி.இ.ஓ-வாக இருந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ட்விட்டர் சி.இ.ஓ-வாக நீடித்து வருகிறார்.
மஸ்க் நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பல லட்சம் கோடிக்கு ட்விட்டரை வாங்கியப் பின் மஸ்க்கின் பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்தது. பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஊழியர்கள் பணி நீக்கம், நிதி பற்றாக்குறை என ட்விட்டர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மஸ்க் வாக்கெடுப்பு ஒன்று நடத்தினார். அதில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து தாம் விலக வேண்டுமா? “ஆம்”, “வேண்டாம்” எனக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலான பயனர்கள் பதவி விலக்க வேண்டும் என வாக்களித்திருந்தனர். ஆனால் அதில் எப்போது பதவி விலகுவார் என எதுவும் குறிப்பிடவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்தாண்டின் இறுதியில் பதவி விலகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/