உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்து ஊழியர்கள் பணி நீக்கம், ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு சந்தா என அடுத்த அதிரடியை களமிறக்கினார்.
ட்விட்டர் விளம்பரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டது. பிறகு மஸ்க் - டிம் குக் சந்தித்துப் பேசினர். மஸ்க்கின் நடவடிக்கைகள் குறித்து பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்கள் முன் ட்விட்டர் சி.இ.ஓ பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா? என பயனர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில், மொத்தம் 17.5 மில்லியன் பயனர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். 57.5% பயனர்கள் “ஆம்” என வாக்களித்தனர். அதே நேரத்தில் 42.5% பேர் “வேண்டாம்”, நீங்களே சி.இ.ஓ பதவியில் தொடரலாம் என வாக்களித்தனர்.
இந்நிலையில், வாக்கெடுப்புக்கு பதிலளிக்கும் படி மஸ்க் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், "பதவிக்கு ஏற்ற முட்டாள் தனம் மிகுந்த ஒருவரை நான் கண்டுபிடித்தப் பின் ட்விட்டர் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்வேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் நான் தலைமை வகிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.