ட்விட்டரில் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயனர் கணக்குகளிடைய வேறுபடுத்தி காட்ட 3 நிறங்களில் வெரிஃபைட் டிக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதியிலிருந்து இது அமல்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் சந்தா என அதிரடி காட்டி வருகிறார். மேலும் ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ப்ளூ டிக் வெரிபிக்கேஷன் process செயலிலும் மாற்றங்கள் கொண்டு வருவதாக தெரிவித்தார்.
பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ. 719) கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மஸ்க் அதை அமல்படுத்தினார்.
இந்தநிலையில், இந்த வெரிஃபைட் டிக் வசதி (அங்கீகரிக்கப்பட்ட பயனர் கணக்கு) 3 நிறங்களில் வழங்கப்பட உள்ளதாக எலான் மஸ்க் நேற்று அறிவித்தார். நிறுவனங்களுக்கு கோல்டன் நிற டிக், அரசாங்க கணக்குகளுக்கு கிரே நிற டிக், தனிநபர்கள் (பிரபலங்கள், மற்றவர்களுக்கு) ப்ளூ டிக் என வகைப்படுத்தி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த புதிய நடைமுறை டிசம்பர் 2-ம் தேதி (அடுத்த வெள்ளிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
ட்விட்டர் போலி கணக்குகளை கண்டறிந்து நீக்க, பிரபலங்கள், தலைவர்கள் போன்றவர்களின் பெயரில் உள்ள போலி கணக்குகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”