பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர், அதாவது (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கியுள்ளார். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு, ட்விட்டர், எலான் மஸ்க் வசம் வந்தது. ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த பராக் அகர்வால் உள்பட மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார்.
ட்விட்டர், உலக முழுவதும் பயன்படுத்தும் பிரபல சமூகவலைதளமாகும். பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சமூகத்தின் மீதான கருத்துகள், தங்களது சொந்த கருத்துகள் என பலவற்றை அதில் பதிவிட்டு வருகின்றனர். தலைவர்கள், பிரபலங்கள் தங்களை பற்றின தகவல்களை ட்விட்டரில் அதிகம் பகிர்கின்றனர். கருத்துகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு டேக் (Tag) செய்து பயன்படுத்துவதால் இது மேலும் கவனம் பெறுகிறது. சமீப காலங்களில் ட்விட்டரில் குற்றங்கள், புகார்கள் வெளிப்படையாக பதிவிடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அனைத்து துறை சார்ந்த பிரச்சனைகளும் பதிவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்தார். சர்வதேச அளவில் கருத்து சுதந்திரத்திற்கு உள்ள தடைகளை களையும் நோக்கில் ட்விட்டரை வாங்க உள்ளதாக அறிவித்தார். ஒரு பங்குக்கு 54.20 டாலர் விலை என்ற வீதத்தில் மொத்தமாக 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்குவதாக கூறினார். எலான் மஸ்க்கின் அறிவிப்புக்கு ட்விட்டர் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் போலி கணக்குகள் தொடர்பான விவரங்களை வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாக எலான் மஸ்க் கூறினார். இதையடுத்து, அமெரிக்க நீதிமன்றத்தில் ட்விட்டர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பின் ட்விட்டர் அதிகாரிகளுடன் எலான் மஸ்க் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, 44 பில்லியன் டாலர் விலையில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ட்விட்டர் உரிமையாளரானார்.
எலான் மஸ்க் ட்விட்
ட்விட்டரின் உரிமத்தை பெற்றதை தெரிவிக்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் சின்னமான பறக்கும் பறவை-யைக் குறிப்பிட்டு எலான் மஸ்க் ட்விட் பதிவிட்டார். அதில், "பறவைக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பெயர் மாற்றியுள்ளார்.
மேலும், "தற்போது ட்விட்டர் தளத்தில் வலதுசாரி, இடதுசாரி கருத்துகளால் நிரம்பியுள்ளது. இது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ஆரோக்கியமான உரையாடலுக்கான தளம் இல்லாமல் போகிறது. எதிர்கால சந்ததியினர் வன்முறை இல்லாத ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்த ஒரு தளம் அவசியம் என்பதை நான் உணர்ந்தேன். அதற்காகவே ட்விட்டரை வாங்கியுள்ளேன். பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்கவில்லை. மனித சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
சி.இ.ஓ நீக்கம்
இந்தநிலையில், ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே, தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த பராக் அகர்வால் உள்பட மூத்த அதிகாரிகளை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ட்விட்டரின் நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காக பணி நீக்க நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் - பராக் அகர்வால் மோதல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டரின் சி.இ.ஓ- ஆக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கப் போவதாக அறிவிப்பு வெளியானது முதலே பராக் அதை எதிர்த்தார்.
எலான் மஸ்க், பராக் அகர்வால் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. வெளிப்படையாகவே இருவரும் சமூகவலைதளங்களில் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க், பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்துள்ளார்.
42 மில்லியன் டாலர் இழப்பீடு
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, பராக் அகர்வாலுக்கு 42 மில்லியன் டாலர் (ரூ.350 கோடி) இழப்பீடாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அகர்வாலின் அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை கொண்டு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கப்போவது உறுதியான நிலையில், அகர்வால் கடந்த திங்கட்கிழமை ஊழியர்களிடம், இனி சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. மஸ்க் நிறுவனத்தை தனியார் மையமாக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறியதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.