உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் மூலம் பணம் சம்பாதிக்க ஃபேஸ்புக் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவாதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப் செயலியை தனது சொந்தமாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
”வாட்ஸ் ஆப் பிசினஸ் எனும் இலவச ஆப் மூலம், சிறு நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கான சில சிறப்பம்சங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ஏர்லைன் நிறுவனங்கள், மின்னனு வர்த்தக சேவை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்காக இத்தகைய சிறப்பு வசதிகளை உருவாக்குகிறோம்.”, என ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
”இந்த அம்சங்களை தொழிலுக்காக பயன்படுத்தும்போது அதற்காக நாங்கள் வருங்காலத்தில் கட்டணத்தை வாங்குவோம்”, என முதன்மை செயல் அலுவலர் மாட் இதேமா கூறினார்.
இந்த சேவைகளை பெறும் நிறுவனங்களிடம் இருந்து அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் விவரங்கள், நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் ஆகியவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப், கடந்த 2014-ஆம் ஆண்டு 22 பில்லியன் டாலர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.