நாம் நினைத்து கூட பார்க்காத வகையில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் பல நேரங்களில் நன்மைகள் கொடுத்தாலும், அதேவேளையில் மனிதர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் சமீப நாட்களாக செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக ChatGPT பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கல்வி முதல் வேலை வரை மனிதர்களின் அனைத்து பணிகளையும் இது செய்கிறது. இதனால் பல துறைகளில் பலருக்கும் வேலைவாய்ப்பு குறையும் அபாயமும் இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தன. ஏ.ஐ தொழில்நுட்பத்தால் நேரம், பணம் சேமிக்க முடியும் எனவும் குறைவான ஊழியர்கள் பணி அமர்த்தினால் போதும் எனவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தவரிசையில் தற்போது செய்தி தொகுப்பாளர் பணியும் சேர்ந்துள்ளது. ஆம், வெளிநாடுகளில் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்கள் உள்ளனர். எப்படி என்று யோசிக்கிறீர்களா? கணினியால் உருவாக்கப்பட்ட மாடல் மிக சாதாரணமாக அச்சு அசல் மனிதர்கள் போல் இயல்பாகவும், மொழி அறிந்து செய்திகளுக்கு தகுந்த உணர்ச்சிகளுடனும் பேசுவதாக கூறுகின்றனர்.
இது ஒரு sci-fi படம் காட்சி போல் தோன்றினாலும், இது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. முதல் AI செய்தி தொகுப்பாளர்கள் 2018-ம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து குவைத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் AI செய்தி தொகுப்பாளர்கள் நடுநிலையோடு செயல்படுவதாகவும், யாருக்கும் சார்பில்லாமல் செய்திகளை வழங்க முடியும் என்று கூறுகின்றனர், அதோடு ஏ.ஐ பல்வேறு மொழி, கலாச்சாரம் உணர்ந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.
AI செய்தி தொகுப்பாளர்கள் என்றால் என்ன?
AI செய்தி தொகுப்பாளர்கள் என்பது கணினியால் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இவர்கள் மொழிக்கு தகுந்த இயல்போடும், உணர்ச்சிகளோடும் ஆழமான கற்றல் கொண்டும் முகபாவனைகள் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். கண் அசைவு, செய்தியின் அர்த்தம் புரிந்து இயல்பான உணர்ச்சிகளுடன் ஈர்க்கக்கூடிய வகையில் செய்திகளை வழங்குகின்றனர். அவர்கள் வெவ்வேறு மொழிகள், உச்சரிப்புகள் மற்றும் பாணிகளை ஏற்று பேசுகின்றனர்.
AI செய்தி தொகுப்பாளர்களின் நன்மைகள்
முதலில் இவர்களுக்கு சம்பளம் தேவையில்லை. விடுமுறைகள் தேவையில்லை. 24/7 வேலை செய்யலாம். தகவல்கள் கொடுக்கப்பட்டுவிட்டால் சோர்வு இல்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அந்தந்த மொழி சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்றபடி செய்தி வழங்குவார்கள்.
AI செய்தி தொகுப்பாளர் ரென் சியாரோங் (சீனா)
சீனாவின் Ren Xiaorong கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் AI-யால் இயங்கும் பெண் தொகுப்பாளர். AI செய்தி தொகுப்பாளரால் 24 மணிநேரமும் வருடத்தில் 365 நாட்களும் செய்திகளை வழங்க முடியும். அரசுக்குச் சொந்தமான சீன நாட்டு ஊடகமான
பீப்பிள் டெய்லி வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் முதன்மை சமூக ஊடகத் தளமான வெய்போவில் AI செய்தி தொகுப்பாளர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ரென் 1000 மனித தொகுப்பாளர்களின் தொழில்முறை திறன்களைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளது.

சியாரோங்கை உருவாக்கியவர்கள் அவர் எந்த தலைப்பைப் பற்றியும் பேச முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் சீனாவின் ‘இரண்டு அமர்வுகள்’ அரசியல் மாநாடு குறித்த நான்கு முன்னமைக்கப்பட்ட கேள்விகளில் ஒன்றிற்கு மட்டுமே பதிலளித்தாக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் சியாரோங்கிற்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதன் செயல் திறன் நன்றாக உள்ளதாக கூறினர்.
ஃபெதா (குவைத்)
இந்த வார தொடக்கத்தில், AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி தொகுப்பாளர் ஃபெதா-வை (Fedha)குவைத் ஊடகம் ஒன்று அறிமுகப்படுத்தியது. லைட் ஹேர்டு தொகுப்பாளர் குவைத் நியூஸ் ஊடகத்தின் ட்விட்டர் கணக்கில் வெள்ளை டி-ஷர்ட், கருப்பு கோட் அணிந்த படி பேசுகிறார்.
நான் ஃபெதா, குவைத்தின் முதல் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர், நீங்கள் எந்த வகையான செய்திகளை விரும்புகிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று அந்த வீடியோவில் பேசுயுள்ளார்.
அல் ஜசீரா அறிக்கையின்படி, “புதிய மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை” உருவாக்கும் AI இன் திறனைப் பரிசோதித்து வருவதாக செய்தி நிறுவனத்தின் துணைத் தலைமை ஆசிரியர் அப்துல்லா போஃப்டைன் கூறினார். ஃபெதா குவைத் உச்சரிப்பைப் சரியாக பயன்படுத்த வேலை செய்து வருகிறோம். குவைத் நாட்டில் Fedha என்றால் சில்வர் என்று பொருள். ரோபோக்கள் சில்வர் மற்றும் metallic நிறத்தில் இருப்பதால் அந்த பெயர்வைக்கப்பட்டதாக போஃப்டைன் கூறினார்
உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளர்
உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளர் சீனாவால் உருவாக்கப்பட்டது. சின்ஹுவா எனப் பெயரிடப்பட்ட ஆண் செய்தி தொகுப்பாளர் ஆவார். 2018-ம் ஆண்டு கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் நடைபெற்ற ஐந்தாவது உலக இணைய மாநாட்டில் சின்ஹுவா அறிமுகப்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“