உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைதளத்தை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான நாளிலிருந்து மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மூத்த அதிகாரிகள் பணி நீக்கம், ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு சந்தா என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
இந்தநிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் எலான் மஸ்க் மோதலில் ஈடுபட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ட்விட்டரை அதன் ஆப் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்க உள்ளதாகவும் மஸ்க் குற்றஞ்சாட்டினார். இது குறித்து மஸ்க் வரிசையாக ட்விட் செய்து குற்றஞ்சாட்டினார்.
- ‘அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா?’
மஸ்க் ஆப்பிள் நிறுவனத்தின் மீது நேரடியான குற்றச்சாட்டைகளை முன் வைத்தார். அமெரிக்காவில்
கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா எனக் கேள்வி எழுப்பி ட்விட் செய்தார். மேலும் மஸ்க் தனத அடுத்தடுத்த ட்விட்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை டேக் செய்து பதிவிட்டார்.
- ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்குவதாக அச்சுறுத்தல்
ஆப்பிள் நிறுவனம் தனது போன் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்குவதாக அச்சுறுத்துகிறது. ஆனால் அச்சுறுத்தலுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆப்பிள் தெளிவாகக் கூறவில்லை என்று மஸ்க் ட்விட்டர் செய்தார்.
- ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக நான் போன் தயாரிக்கிறேன்
எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் மின்சார கார் நிறுவனமான டெல்ஸா உரிமையாளராவர். ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்பட்டால், அதற்கு மாற்றாக நான் போன் தயாரிப்பில் இறங்குகிறேன் என்று அதிரடி காட்டியுள்ளார்.
- ஆப்பிள் 30% ரகசிய வரி
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோரில் இருந்து வாங்கும் அனைத்திற்கும் 30% ரகசிய வரி விதிக்கிறது. ஆப் ஸ்டோரில் மற்ற நிறுவனத்தின் செயலிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் டெவலப்பர்கள் மீது 30% ரகசிய வரி விதிக்கிறது என்று சாடினார். கடந்த காலத்தில் பல டெவலப்பர்கள், எபிக் கேம்ஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை நிறுவனம் கூட அதிக வரிக்கு எதிராக குரல் கொடுத்தனர் என்று கூறினார்.
- ஆப்பிள் தணிக்கை நடவடிக்கைகளை வெளியிட வேண்டும்
ஆப்பிள் அனைத்து தணிக்கை நடவடிக்கைகளையும் வெளியிட வேண்டும் எனக் கூறி 'ஆம்', 'இல்லை' எனக் குறிப்பிட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil