முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது முதல் முறையாக தனது வருமானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் என அதிரடியுடன் இந்திய தொலைதொடர்பு சந்தைக்குள் நுழைந்த ஜியோ, புதிய சகாப்தம் படைத்தது. இலவச 4ஜி டேட்டா மற்றும் இலவச கால்ஸ் ஆஃபரின் மூலம் பல்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை விரும்பத் தொடங்கினர். இந்த நிலையில், சமீபத்திய நிலவரத்தின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 138.6 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரூ.6,150 கோடி வருமானம் ஈட்டிய நிலையில், ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஏர்டெல் நிறுவனமானது, டாட்டா மொபைல்-போன் வர்த்தகத்தை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதேபோல, முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும், இந்தியாவில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருக்கின்றன. ஐடியா-வோடபோன் நிறுவனங்கள் ஒன்றிணையும் பட்சத்தில், அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் பின்னுக்குத் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறது கவனிக்கத்தக்கது.