ககன்யான் திட்டம் இந்தியாவின் லட்சிய திட்டங்களில் ஒன்றாகும். ககன்யான் திட்டம் மூலம் இந்தியா முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் குழு விண்வெளி பயணமாகும் (crewed Indian space mission).
இந்நிலையில், ஆகாஷ்வானியில் (அகில இந்திய வானொலி) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான், சந்திரயான்- 4 திட்டத்திற்கான உத்தேச தேதிகளை அறிவித்தார். மனித விண்வெளிப் பயணத் திட்டம் ககன்யான் 2026 இல் இருக்கலாம். நிலவு மாதிரி திரும்பும் பணி சந்திரயான்-4 2028 இல் இருக்கலாம் எனக் கூறினார்.
இஸ்ரோ- ஜப்பான் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா உடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் சந்திரயான்-5 திட்டமாக இருக்கலாம் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். இதற்கு லூபெக்ஸ் அல்லது Lunar Polar Exploration எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான தேதியை அவர் கூறவில்லை. சந்திரயான்-5 என்பதால் சந்திரயான் -4 திட்டமிடப்பட்ட 2028க்குப் பிறகு இது இருக்கும் என எதிர்பார்க்க முடியும்.
லூபெக்ஸ் பற்றி பேசிய அவர், "இது மிகவும் கடினமான மிஷனாக இருக்கும். இந்த திட்டத்தில் லேண்டர் இந்தியாவால் வழங்கப்படும், அதே நேரத்தில் ரோவர் ஜப்பானில் இருந்து வரும். சந்திரயான்-3ல் இருந்த ரோவர் எடை வெறும் 27 கிலோ மட்டுமே.
ஆனால் இந்த திட்டத்தில் 350 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும். இது ஒரு விஞ்ஞான கனரக பணியாகும், இது சந்திரனில் மனிதர்களை தரையிறக்கும் திட்டத்திற்கு ஒரு படி நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும் " என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“