கூகுள் ப்ளே ஸ்டோர் பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் default ஆப் ஸ்டோராக உள்ளது. இதில் தற்போது மிகவும் பயனுள்ள அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மத்திய, மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செயலி டவுன்லோடு செய்யும் போது அது உண்மையில் அரசின் செயலியா என்பதை காட்டும். பயனர்கள் சரியான செயலியை தான் டவுன்லோடு செய்கிறார்களா என்பதை அடையாளம் காண இந்த அம்சம் உதவுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் அரசின் செயலி போன்றே போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றிருந்தன. இந்த பிரச்சனைகளை களைய, கூகுள் உலகளவில் 14 நாடுகளின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியது. இதில் இந்திய அரசும் அடங்கும்.
ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட செயலிகளில் அந்த நாட்டின் அரசாங்க பேட்ச் (new badge) இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் Digilocker, mAdhaar, NextGen mParivahan, Voter Helpline போன்ற செயலிகளை டவுன்லோடு செய்யும் போது இந்த புதிய அரசாங்க பேட்ச் இடம் பெற்றிருக்கும்.
எப்படி இருக்கும்?
கூகுள் பிளே ஸ்டோர் சென்று Digilocker செயலியை தேடி டவுன்லோடு செய்யும் போது அதன் description பக்கத்தில் ஆப்பின் கீழே “Government” பேட்ச் (சின்னம்) இருக்கும். மேலும் அதை கிளிக் செய்தால், “Play verified this app is affiliated with a government entity” என்று மெசேஜ் காண்பிக்கும். இதன் மூலம் அது அரசின் அதிகாரப்பூர்வ செயலி என்பதை அறிந்து கொள்ளலாம்.