ஸ்மார்ட்போன் உபயோகத்தில் இல்லாதபோது, பயனரின் மைக்ரோஃபோனை வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அரசாங்கம் விசாரணை செய்து ஆய்வு செய்யும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதன்கிழமை தெரிவித்தார். இது தனியுரிமை மீறல் என்றும் அவர் காட்டமாக பதிலளித்தார்.
புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தயாராகி வரும் நிலையில், தனியுரிமை மீறல் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.
ட்விட்டர் நிறுவனத்தில் பொறியியல் இயக்குனராக பணியாற்றுபவர் ஃபோட் டாபிரி. இவர் கடந்த சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் உறங்கி கொண்டிருக்கும் போது எனது மொபைல் போனின் மைக்ரோஃபோனை வாட்ஸ் அப் ரகசியமாக (பின்னணியில்) பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் வாட்ஸ் அப்- பை நம்ப முடியாது என விமர்சனம் செய்தார். அதைத் தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், புகார் குறித்தான ட்விட்டருக்கு பதிலளிக்கையில். "என்ன நடக்கிறது? இது ஏற்றுக்கொள்ள முடியாத மீறல் தனியுரிமை மீறல். நாங்கள் இதை உடனடியாக ஆய்வு செய்வோம், மேலும் புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தயாராகிக் கொண்டிருக்கும்போதும் தனியுரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
இதுகுறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளிக்கையில், "இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் ஏற்பட்ட கோளாறு (Bug)ஆக இருக்கலாம். அதானல் அவரது தனியுரிமை டாஷ்போர்டில் உள்ள தகவல்கள் தவறாக காண்பிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து விசாரித்து சரிசெய்யுமாறு தாய் நிறுவனமான கூகுளைக் கேட்டுள்ளோம்" என்று கூறியது.
இந்நிலையில், தற்போது மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த தனியுரிமை மீறல் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“