பொதுவாக, செல்ஃபோன் தொலைந்து போனால், IMEI நம்பர் தெரியுமா? என்று கேட்பார்கள். IMEI நம்பர் என்றால் என்ன? அதை வைத்து தொலைந்து போன மொபைலை ட்ராக் செய்வது சாத்தியமா? என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
IMEI நம்பர் என்றால் என்ன?
ஐ.எம்.இ.ஐ (International Mobile Equipment Identity) எண் என்பது 15 இலக்க எண். உங்கள் மொபைல், எந்த நாட்டைச் சேர்ந்த தயாரிப்பு என்பதற்கும், அது தற்போது எந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளது என்பதை கண்டறியவும் உதவும் எண்ணாகும். இது பேட்டரியின் உள்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். இதனை உங்கள் மொபைலில் *#06# என்று டைப் செய்து தெரிந்து கொள்ளலாம். 2003ம் ஆண்டு தான் ஆஸ்ரேலியாவில் முதல் முதலாக இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் அறிமுகம் செய்யப்பட்டது. போலி தயாரிப்புகள் மற்றும் முறையற்ற தயாரிப்புகளில் IMEI நம்பர் தவறானதாக இருக்கும்.
IMEI நம்பரை பயன்படுத்தி காணாமல் போன செல்போன் இருக்கும் இடத்தை அறிய முடியும். அது மட்டுமின்றி அந்த செல்போனில் புதிய சிம் கார்டு மாற்றப்பட்டாலும், மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக ட்ராக் செய்துவிட முடியும். ஒருவரது ஃபோன் காணாமல் போனாலோ அல்லது எங்கேயாவது தவறவிட்டாலோ அதனை இந்த எண் மூலம் கண்டறிவது மிகவும் சுலபம்.
மொபைல் போனை ட்ராக் செய்வது எப்படி?
பொதுவாக, ஹேக்கர்கள் ரகசியமாக ட்ராக் செய்கின்றனர். அது சட்டப்படி குற்றம். அதைச் செய்வதும் குற்றம், செய்யச் சொல்வதும் குற்றம். உங்கள் விலை உயர்ந்த செல்ஃபோன் காணாமல் போனாலோ, திருடப்பட்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். உங்கள் மொபைலின் IMEI நம்பருடன் எழுத்துப் பூர்வமாக Crime Branch பிரிவில் புகார் அளிப்பதே சட்டப்பூர்வமான முயற்சியாகும்.