பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 31-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது, வருமான வரித் துறை, வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றிக்கு பான் கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பான் கார்டில் ஏதாவது திருத்தம் செய்த வேண்டி இருந்தால் அதை ஆன்லைனில் எளிதாக செய்யலாம். குறிப்பாக ஆதார்- பான் இணைக்கும் போது இரு கார்டிலும் உள்ள தகவல்கள் ஒன்று போல், சரியாக இருக்க வேண்டும். உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றில் மாறி இருந்தாலும் அதை முதலில் திருத்தம் செய்து தான் ஆதார்- பான் இணைக்க முடியும்.
அந்த வகையில், உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
- புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- இப்போது அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Application Type’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவும்.
- அடுத்து, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும். பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் டோக்கன் எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் இ-மெயில் ஐடி-யை சரியாக கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து விண்ணப்ப பக்கம் சென்று அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
- விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.