நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில் இந்த வரிவிதிப்பு முறை அமலானது.
அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம். தேசிய வளர்ச்சிக்கான திட்டம். பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு அறிமுகமாகியுள்ளது இந்த ஜி.எஸ்.டி. முதலில் மாநிலங்களுக்க நிறைய சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது. சர்தால் படேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதுபோலத் தான் பல வரிகள் ஒன்றுசேர்ந்து ஜி.எஸ்.டி ஆக உருவாகி உள்ளது. ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு நனவானது" என்று கூறினார்.
இந்த புதிய வரி கொள்கையால், எந்த பொருட்களின் விலை ஏறியிருக்கின்றது? எதன் விலை குறைந்திருக்கிறது? என்பதில் இன்னமும் பலருக்கு குழப்பம் தான். விலைப் பட்டியல் மட்டுமல்ல, இந்த ஜி.எஸ்.டி. குறித்தே பல குழப்பங்கள் மக்களுக்கு உள்ளது. இந்த அனைத்து குழப்பத்திற்கும் தீர்வு காணும் வகையில், புதிய மொபைல் ஆப் ஒன்றை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என்று இந்த ஆப்பிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஜிஎஸ்டி வரி எந்த பொருளுக்கு எவ்வளவு சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுங்கத் துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் அடங்கிய குழு இந்த செயலியினை உருவாக்கியுள்ளது.
தற்போது இந்த ஆப்பினை ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் எளிதாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். விரைவில் ஐஓஎஸ் தளத்திலும் இந்த ஆப் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஆஃப்லைன் மோடில் இருக்கும் போது கூட இந்த ஆப்-ஐ நாம் உபயோகிக்க முடியுமாம்.
ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் ஆப்-ஐ டவுன்லோட் செய்வது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பிளேஸ்டோரை ஓப்பன் செய்யுங்கள்.
2. அதில் 'GST Rates Finder' என்று டைப் செய்யவும்.
3. உடனே திரையில் தோன்றும் அந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்தால், உங்கள் ஃபோனில் அது டவுன்லோட் ஆகிவிடும்.
ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் ஆப்-ஐ எப்படி உபயோகிப்பது?
1. இன்ஸ்டால் செய்யப்பட்ட இந்த ஆப்-ஐ உங்கள் ஃபோனில் ஓப்பன் செய்யுங்க.
2. நீங்கள் எந்த பொருளின் ஜி.எஸ்.டி வரி குறித்த விவரத்தை அறிய வேண்டுமோ, அந்த பொருளை சேர்ச் பாக்சில் டைப் செய்யவும்.
3. நீங்கள் குறிப்பிட்ட பொருளின் ஜி.எஸ்.டி. வரி விவரம் திரையில் தோன்றும்.