4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோபோனுக்காக முதலில் பாதுகாப்பு தொகையாக ரூ.1500 செலுத்த வேண்டும் என்றும், மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த தொகை திரும்ப கொடுக்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்தது. இதனால், ஜியோபோனுக்கான எதிர்பார்ப்பு அதிகமானது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெலிவரி தாமதமான நிலையில், செப்டம்மர் மாத இறுதியில் டெலிவரி தொடங்கியது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ புதியதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.1500 தொகையை திரும்பப் பெற வேண்டும் என்றால், அவர்கள் மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூ.4,500-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்படி ஆண்டுக்கு குறைந்தது ரூ.1500 ரீசார்ச் செய்ய வேண்டும், அல்லது அந்த ஜியோபோனை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய விதிமுறைகளில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோபோன் வாடிக்கையளர்களுக்கு ரூ.153 என்ற குறைந்த விலையில், ப்ளான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ப்ளானை பயன்படுத்தினாலே, ஆண்டுக்கு ரூ.1500-க்கும் மேல் ரீசார்ஜ் தொகை வந்துவிடும். ரூ.153 ப்ளானில், நாள் தோறும் 512 எம்.பி 4ஜி டேட்டா, அன்லிமிடட் வோல்ட்இ கால்ஸ் மற்றும் மெசேஜேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களின் முடிவில் ஜியோபோனை திரும்ப ஒப்படைத்தால் தான், முன்னதாக செலுத்திய ரூ.1500 பாதுகாப்பு தொகையை திரும்ப பெற முடியும். மேலும், ஜியோபோன் செயல்படும் நிலையிலும், பாதிப்பு ஏற்படாத நிலையில் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. 3 வருடங்கள் முடிவடைவதற்கு முன்னதாகவே ஜியோபோனை திரும்ப ஒப்படைக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 12 மாதங்களுக்குள்ளாக திரும்ப ஒப்படைத்தால் பாதுகாப்பு தொகையில் உள்ள ரூ.1500 முழுவதுமாக பிடித்தம் செய்யப்படும்.
- 12-14 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜியோபோனை ஒப்படைத்தால் ரூ.1000 பிடித்தம் செய்யப்படும்.
- 24-36 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜியோபோனை திரும்ப ஒப்படைத்தால் ரூ.500 பிடித்தம் செய்யப்படும்.
முன்னதாக, முகேஷ் அம்பானி ஜியோபோனை அறிமுகம் செய்யும்போது ரூ.1500 திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜியோபோனில் புதிய விதிமுறைகள் இதனை தெளிவு படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.4500 தொகைக்கு ரீசார்ச் செய்திருக்க வேண்டும் என்றும், ஜியோபோனை 3 ஆண்டுகள் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த தொகை திரும்ப கொடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.