தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை மேம்படுத்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. The future-ready technology summit 2023, மாநாட்டில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பல கிளவுட் அடிப்படையிலான மற்றும் AI-இயங்கும் திட்டங்களைக் காட்சிப்படுத்தினார். விண்வெளி தொழில்நுட்ப களத்தின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மேம்படுத்த மைக்ரோசாப்ட்டின் திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
தொழில்நுட்ப கருவிகள் மற்றும் பிற திட்டங்களை பயன்படுத்தி விண்வெளித்துறையை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரோவுடன் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மைக்ரோசாப்ட் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு உதவி புரியும். விண்வெளித்துறை ஸ்டார்ட்அப்களின் முயற்சியை மேலும் விரிவுபடுத்த உதவும். மைக்ரோசாப்ட் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி பேசுகையில், "இந்தியாவில் உள்ள விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள், தொழில்நுட்பத்தின் சக்தியுடன் நாட்டின் விண்வெளி திறன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. எங்கள் தொழில்நுட்ப கருவிகள், தளங்கள் மற்றும் வழிகாட்டல் வாய்ப்புகள் மூலம், அதிநவீன கண்டுபிடிப்புகளை இயக்குவதற்கும் அறிவியல் கண்டுபிடிப்பை விரைவுபடுத்துவதற்கும் நாட்டில் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதில் நாங்கள் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கிறோம் " என்று கூறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை இலவசமாக வழங்கி உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் தலைவர் ஸ்ரீ.எஸ். சோமநாத் கூறுகையில், "மைக்ரோசாப்ட் உடனான இஸ்ரோவின் ஒத்துழைப்பு விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏஐ, மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் போன்ற அதிநவீன முறைகளைப் பயன்படுத்தி விரிவான செயற்கைக்கோள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய பெரிதும் பயனளிக்கும்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/