பாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி

பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, ஆடையில் பொருத்திக்கொள்ளும் ஸ்டிக்கர் போன்ற சென்சார் கருவியை இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதிய சென்சார் கருவியை அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான கருவியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த மனிஷா மோகன். இவர், பெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதிய சென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் ஏற்படும்போது, இந்த கருவியானது, அருகில் உள்ளவர்கள், மற்றும் அப்பெண்ணின் நண்பர்கள், உறவினர்களுக்கு அலெர்ட் செய்யும். இந்த சென்சார் கருவியை பெண்கள் தங்கள் ஆடையில் பொருத்திக் கொள்ளலாம். பெண் ஒருவர் தன்னுடைய ஆடையை அவராகவே விருப்பத்துடன் களைகிறாரா அல்லது அவரது உடையை மற்றவர்கள் கட்டாயப்படுத்தி கழட்டுகின்றனரா என்பதற்கான வித்தியாசத்தை உணரும் வகையில் அக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இல்லாமலும், அல்லது துன்புறுத்தும் நபரை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் இருந்தாலும் அக்கருவியின் மூலம் அச்சம்பவத்தின் அலெர்ட்டை மற்றவர்கள் பெற முடியும். இந்த சிறப்பம்சம் குழந்தைகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், மது அருந்தியவர்கள் ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும்போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

செல்ஃபோன் ஆப் ஒன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளூடூத் மூலம், பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும்போது அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு உரத்த சத்தம் எழுப்பப்படும்.

இந்த சென்சார் கருவி இரண்டு முறைகளில் செயல்படுகிறது. பாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இருந்தால் அந்நேரத்தில் சென்சார் கருவியின் பட்டனை அழுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு அலர்ட் செய்யப்படும். அவர், சுயநினைவில் இல்லாமல் இருந்தால், சுற்றுப்புறம் மூலம் அக்கருவி அலெர்ட் செய்யும்.

உதாரணமாக, அப்பெண் தன் உடையைக் கழற்றினால் அவருடைய செல்ஃபோனுக்கு, அவர் விருப்பத்துடன் ஆடை கழற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய குறுந்தகவல் அனுப்பப்படும். ஆனால், 30 நொடிகளுக்குள் அப்பெண்ணிடம் இருந்து பதில் வராவிட்டால், அக்கருவி மற்றவர்களை அந்த சுற்றுப்புறத்தில் உரத்த சத்தத்தை எழுப்பும். இதன்பின், அடுத்த 20 நொடிகளுக்குள் பாஸ்வேர்ட் மூலம் அப்பெண் அலார சத்தத்தை அணைக்க முயற்சிக்காவிட்டால், அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அலர்ட் செய்யும். அந்த பெண் எங்கிருக்காரோ அந்த இடத்தையும் மற்றவர்களுக்கு அக்கருவி தெரியப்படுத்தும்.

×Close
×Close