எச்.எம்.டி குளோபல் நிறுவனமானது அக்டோபர் 31-ம் தேதி இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அழைப்பை அந்நிறுவனம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது நோக்கியா 7 இந்தியவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அக்டோபர் 31-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் போது, அந்நிறுவனத்தின் குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனான, நோக்கியா 2 போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நோக்கியா 7 ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில்,கேமராவில் ‘போத்தி’ சிறப்பம்சம் உள்ளது. நோக்கியா 7 ஸ்மார்ட்போனானது சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை முதல் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வெளிவருகிறது. 4ஜி.பி ரேம் கொண்ட நோக்கியா 7 ஸ்மார்ட்போன் சீனமதிப்பில் CNY 2,499(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,000) மற்றும் 6ஜி.பி ரேம் கொண்ட நோக்கியா 7 ஸ்மார்ட்போன் சீனமதிப்பில் CNY 2,699 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26,500) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சீனாவில் மட்டுமே நோக்கியா 7 விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும், நோக்கியா 2 என்பது எச்.எம்.டி நிறுவனத்தின் மலிவான விலையில் வெளிவிடப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் குறித்து எந்தவித தகவலும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், நோக்கியா 2 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பில் ரூ.6,500 என்ற விலையில் வெளிவரலாம் என கூறப்படுகிறது. மேலும், 1ஜி.பி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 210 SoC( Snapdragon 210 SoC) பிராசஸர் அம்சத்துடன் நோக்கியா 2 வெளிவரலாம் என எதிர்பார்கப்படுகிறது.