ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் மற்றொரு இணையதளத்தில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச இன்டெர்நெட் மற்றும் இலவச ஃபோன்கால்ஸ் என தொடக்கத்தில் களம் இறங்கிய ஜியோவிற்கு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் சட்டென மாறிவிட்டர். இதனால், இந்தியாவின் முன்னணி தெலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்தது. 3ஜி சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வந்த வேளையில், 4ஜி இலவசமாக கிடைக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா என நினைத்து போட்டி போட்டுக் கொண்டு ஜியோ சிம் வாங்க நாள் கணக்கில் கடை வாசலில் சுற்றித் திரிந்தனர்.
மேலும், ஆதார் மட்டும் இருந்தால் போதும் என அறிவித்து தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது ஜியோ. நாட்கள் செல்லச் செல்ல போட்டி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது ஜியோ. தற்போது கிட்டத்தட்ட 120 மில்லியன் பேர் ஜியோவில் இணைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. magicapk.com என்ற வெப்சைட்டில் தான் இந்த ஜியோ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுககிறது. எனினும், அதுபோன்று எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளகனின் தகவல்களை வெளியிட்ட magicapk.com என்ற இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. இது தொடர்பான செய்தியை முதலில் Fonearena.com வெளியிட்டது. இதன் பின்னர் வாசகர்களும் தகவல் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக அந்த இணையதளத்தின் ஆசிரியர் வருண் கிரிஷ் இந்தியன் எக்ஸ்ப்ரஸ்-க்கு அளித்த தகவலின்படி: என்னுடைய விவரங்களையும், என்னுடைய பணிபுரியும் நபர்கள் குறித்த தகவல்களை அந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.இந்த விஷயம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது என்று கூறினார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், சோதனை செய்து பார்த்தபோது, கடந்த வாரம் வாங்கப்பட்ட நம்பர்கள் குறித்த விவரங்கள் அதில் இருந்தது. எனினும், சோதனையின் போது, பலமுறை அதில் சரியான விவரங்களை காண்பிக்கவில்லை என்பதால், அனைத்து நம்பர்களின் விவரங்கள் அந்த இணைதளத்தில் இருந்ததாக என்பது குறித்து அறியமுடியவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/jio-759-1.jpg)
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிட்ட அந்த வெப்சைட்டில், தேடும் வகையில் ஒரு பாக்ஸ் உள்ளது. அதில் ஜியோ நம்பரை பதிவு செய்து, அந்த நம்பரை வைத்திருப்பவர் குறித்த விவரங்களை பெற முடிந்தது. ஜூலை 2-ம் தேதி வாங்கப்பட்ட ஒரு ஜியோ நம்பரைக் கொண்டு நாங்கள் சோதனை செய்து பார்த்தபோது, நம்பர் வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பெயர், எந்த பகுதி, எப்போது ஆக்டிவேஷன் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை காண முடிந்தது. Fonearena.com சோதனை செய்தபோது, கிட்டத்தட்ட 3 நம்பர்களின் ஆதார் எண் மற்றும் ஈமெயில் ஐடியை காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளியிட்டுவந்த magicapk.com, நேற்றிரவு சுமார் 11:40 மணியளவில் முடங்கியது. ஏராளமானோர் அந்த இணையதளத்திற்கு சென்று செக் செய்ததால் முடங்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக முடங்கியதா என்பது குறித்து தெரியவில்லை. ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றொரு இணையதளத்தின் மூலம் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.