முன்பதிவு செய்யப்பட்ட ஜியோபோன் இன்று முதல் டெலிவரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஜியோபோன்களை கிராமப்புறங்களில் இருந்து டெலிவரி செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கிராமப்புரங்களில் ஜியோபோன் டெலிவரி செய்யப்பட்ட பின்னரே, நகரப்பகுதிகளுக்கு ஜியோபோன் டெலிவரி செய்யப்படுமாம்.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், டெலிவரி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதனால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1500 தொகை செலுத்த வேண்டும் என்றும், மூன்று வருடங்கள் கழித்து இந்த தொகை திரும்பக் கொடுக்கப்படும் என ஜியோ தெரிவித்தது. அதன்படி, முன்பதிவின்போது ரூ.500 தொகை செலுத்தவேண்டும் என்றும், பின்னர் டெலிவரி செய்யப்படும்போது மீதமுள்ள ரூ.1000 தொகையை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தாமதமாகி வந்த ஜியோபோன் டெலிவரி இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகின. சுமார் 6 மில்லியன் ஜியோபோன்கள் 10-15 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பான தகவலை ஜியோ நிறுவனம் உறுதிசெய்யவில்லை.