1918-ஆம் ஆண்டுக்குப் பிறகு 99 ஆண்டுகள் கழித்து, திங்கள் கிழமை முழு சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. அமாவாசை அன்று, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால், 99 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வு அமெரிக்காவின் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. அப்போது, முழு பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆசியாவிலும் காட்சியளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது எனவும், 2014-ஆம் ஆண்டு நடைபெறும் முழு சூரிய கிரகம் இந்தியாவில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக்கூடாது எனவும், அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்நிகழ்வை வெறுங்கண்ணால் பார்த்தால், குறிப்பாக முழு சூரிய கிரகணத்தின் இறுதிக்கட்ட நிகழ்வை வெறுங்கண்ணால் பார்த்தால் கண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்நிகழ்விற்கு முந்தைய, பிந்தைய மற்றும் நிகழும்போது புகைப்படங்கள் எடுத்து நேரலையில் காண்பிக்க 80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டுள்ளனர்.
எத்தனை மணிக்கு சூரிய கிரகணம் நிகழும்?
இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.30-க்கு நிகழும். அந்த நேரத்திலிருந்து நாசா இணையதளம் அதன் புகைப்படங்களையில் நேரலையாக வெளியிடும். கேமரா பொருத்தப்பட்ட பலூன்கள் தவிர, நாசா விஞ்ஞானிகளும் விண்வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஃபேஸ்புக், ட்விட்டர், ட்விட்ச் டிவி, யூடியூபில் நேரலையாக அதனை வெளியிட உள்ளனர். இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. அதனால், நாம் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.