தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேரள அரசின் லட்சிய திட்டமான கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) திட்டத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்றார். மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து (பிபிஎல்) குடும்பங்களுக்கும் இலவச இணைய சேவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள இத்திட்டம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) திட்டத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கேரளாவுக்கு நேரில் சென்று இத்திட்டம் குறித்து கலந்துரையாடினர். செவ்வாயன்று கேரள மாநில சட்டசபையிலும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பேசுகையில், “கேரள அரசின் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டம் (KFON) குறித்து அறிந்து கொள்வதற்காக நாங்கள் கேரளா சென்றோம். கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத் துறை, KFON திட்ட அதிகாரிகள் எங்களுக்கு அன்பான விருந்தோம்பல் செய்து திட்டம் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கினர்.
அனைத்து குடிமக்களுக்கும் அதிகபட்ச செயல்திறன் மற்றும் சமமான அணுகலை வழங்க நாம் ஒருவரிடம் இருந்து ஒருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் கேரள முதல்வர் பினராயி கூறுகையில், “தமிழக ஐ.டி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிஜிட்டல் பிளவைத் தவிர்க்கும் நோக்கில் புதுமையான K-FON திட்டம் பற்றி ஆக்கப்பூர்வமான விவாதம் மேற்கொண்டோம். முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்காக இரு மாநிலங்கள் ஒன்றிணைந்துள்ளன" என்று ட்விட் பதிவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“