கூகுள் ஆட்சென்ஸில் தமிழ் மொழிக்கு அங்கிகாரம்

தற்போது தமிழுக்கு திறந்துள்ள பொருளாதாரக் கதவுகளை, இனி உலகின் பல மூளைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .

ஆர்.சந்திரன்

கடந்த பல ஆண்டுகளாக நடந்த பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் Adsenseல் தமிழுக்கு அதிகாரப்பூர்வ மொழி என்ற அங்கிகாரம் கிடைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று, அதாவது 2018 பிப்ரவரி 9ம் தேதியன்று, இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி, ஹிந்தி, பெங்காலி, தமிழ் மூன்றும் Adsenseல் ஏற்கப்பட்ட இந்திய மொழிகள் என அங்கிகாரம் பெறுகின்றன.

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்று எனச் சொல்லப்பட்டாலும், தமிழுக்கு இந்த அங்கிகாரம் இதுவரை இல்லாமல் இருந்தது. இதனால், தமிழ் மொழியில் தகவல்களைக் கொண்ட இணைய தளங்கள், “வலைதளங்களாகவும், தங்களது உள்ளடக்கத்தால், மற்றவர்களை ஈர்க்கும்” என்பதும் கூகுள் நிறுவனத்தால் ஏற்கப்படாமல் இருந்தது எனலாம். எனவே, அவை கூகுள் மூலமான விளம்பரங்களைப் பெற இயலாத நிலை இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களால் அணுகப்படும் எந்த துறை வலைதளமாக இருந்தாலும், அதில் கூகுள் விளம்பரங்கள் இடம்பெறாததால், அந்த விளம்பரங்கள் மூலம் பெற வாய்ப்புள்ள வருவாய் உரியவருக்குக் கிடைக்காமல் இருந்தது. தற்போது, கூகுள் Adsense தமிழை ஏற்றுக் கொண்டுள்ளதால் மேற்கண்ட சிக்கல் முடிவுக்கு வருகிறது.

இன்றைய நிலையில் உலகின் 43 மொழிகளுக்கு, கூகுள் Adsenseல் இவ்வகையான அங்கிகாரம் உள்ளது. எனினும், மிக அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படும் தெலுங்கு உள்ளிட்ட இன்ன பிற இந்திய மொழிகளுக்கும் அங்கே இன்னும் இடம் கிடைக்கவில்லை. ஆனால், அதைவிட குறைவான எண்ணிக்கை கொண்ட மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு Adsenseல் இடம் உள்ளது. தகுதியுள்ள பல இந்திய மொழிகளுக்கு அங்கே இடமில்லா நிலை தொடர, இந்திய அரசின் மொழி குறித்த பார்வையும், சரியான புரிதலும், அதையொட்டிய முயற்சியும் இல்லாததே காரணம் என்கிறார்கள் மொழியியல் துறையினர்.

எது எப்படியானாலும், இன்று தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த உலகையும் கட்டி ஆண்டுவரும் கூகுள், தற்போது தமிழுக்கு திறந்துள்ள பொருளாதாரக் கதவுகளை, இனி உலகின் பல மூளைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, தற்போதைய அங்கிகாரத்ததால், மற்ற மொழி வலைதளங்களிலும் தமிழ் மொழியில் விளம்பரம் செய்ய நினைத்தால், அதுவும் சாத்தியமாகிறது.

×Close
×Close