மொபைல்போனின் ஐஎம்இஐ எண்ணை சட்டத்திற்கு புறம்பாக மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. செல்போன் என்றால், அதில் ஐஎம்இஐ நம்பர்கள் என்ற அடையாள எண் கண்டிப்பாக இருக்கும். இந்த ஐஎம்இஐ எண்ணை போனில் *#06# என்ற குறியீடுகளை அழுத்தினால் காண முடியும். அதோடு, சிம் கார்டு ஸ்டடுல் சிம் பயன்படுத்தும் போன் என்றால், அந்த போனில் இரண்டு ஐஎம்இஐ எண்கள் இருப்பதை காண முடியும். ஐஎம்இஐ எண்ணானது திருடுபோன மொபைல்போனை கண்டறிவதற்கு முக்கித்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
ஆனால், திருடுபோன மொபைல்போனின் ஐஎம்இஐ எண்கள் சட்டத்திற்கு புறம்பான வழியில், சாஃப்ட்வேர் மூலமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. போலியான ஐஎம்இஐ எண்களுக்கு போன்கள் மாற்றப்படுவதனால், காணாமல் போன மொபைல் போனை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்தன. ஒவ்வொரு போனுக்கும் வெவ்வேறு ஐஎம்இஐ எண்கள் வழங்கப்படும் நிலையில், ஒரே ஐஎம்இஐ எண்ணில் சுமார் 18000-க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், ஐஎம்இஐ எண்களை மாற்றுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருடுபோன மொபைல்போனில் உள்ள சிம் கார்டு மாற்றப்பட்டாலும் அல்லது ஐஎம்இஐ எண் மாற்றம் செய்யப்பட்டாலும், அந்த மொபைல்போனை முடக்குவதற்கான முயற்சியை மத்திய தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.