உலகளவில் சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய அறிக்கைபடி, சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 4.8 பில்லியனாக அறிவிக்கப்பட்டது. எனினும் சில பிரபலமான தளங்கள் தொடர்ந்து பயனர்களின் ஆதரவை இழக்கின்றன. சராசரியாக, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 6 முதல் 7 வெவ்வேறு தளங்களை பயன்படுத்துவதாகவும், அதற்காக ஒரு நாளைக்கு சுமார் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் செலவிடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் சமூக வலைதளங்கள் அனைத்தும் தொடர்ந்து பயனர்களின் ஆதரவை பெறும் என்று கூற முடியாது.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான TRG Datacentres - ன் அறிக்கையின்படி, ஜூலை 2023-ல் அறிமுகம் செய்யப்பட்ட 5 நாட்களில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்ற மெட்டாவின் த்ரெட்ஸ் (Meta’s Threads) செயலி பின்னர் தொடங்கப்பட்டதிலிருந்து தினசரி செயலில் உள்ள பயனர்களில் 80 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது.
இந்நிலையில், இந்தாண்டு உலகளவில் பயனர்கள் அதிகம் டெலிட் செய்த ஆப் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில், யாரும் எதிர்பார்த்திராத விதமாக இன்ஸ்டாகிராம் செயலி பயனர்களால் அதிகம் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இன்ஸ்டாகிராம் செயலி அதிகம் டெலிட் செய்யப்படும் ஆப் தேர்வுகளில் உள்ளது. 2023-ல் ஒவ்வொரு மாதமும் ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது’ என உலகளவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேடி உள்ளனர்.
TRG டேட்டாசென்டர்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கிறிஸ் ஹிங்கிள் கூறுகையில், "2023 ஆம் ஆண்டில் அதிகம் நீக்கப்பட்ட செயலியாக இன்ஸ்டாகிராமின் தனிச்சிறப்பு சமூக ஊடக விருப்பத் தேர்வுகளில் மாறிவரும் நிலப்பரப்பை எதிரொலிக்கிறது. "இது பயனர் முன்னுரிமைகளில் மாறும் மாற்றத்தைக் காட்டுகிறது, மேலும் நம்பகத்தன்மையுடன் எதிரொலிக்கும் மற்றும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தளங்களுக்கான தேவையைக் குறிக்கிறது" என்றார்.
ஆய்வு எப்படி செய்யப்பட்டது?
Statista.com அறிக்கையின்படி ஆராய்ச்சியாளர்கள் உலகளவில் மிகவும் பிரபலமான 9 சமூக வலைதளங்களைப் பயன்படுத்தினர். இவை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் செயலிகளாக இருந்தன. ‘எனது அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி’ என்று எத்தனை முறை தேடப்பட்டுள்ளது என்பது குறித்து 12 மாதங்களுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டது.
ஒவ்வொரு பயன்பாட்டையும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையுடன் இது செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பின்னர் உலகளாவிய மக்கள்தொகையைப் பயன்படுத்தி 1,00,000 க்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சொற்களைத் தேடும் நபர்களின் எண்ணிக்கையை சமன் செய்தனர்.
ஆராய்ச்சியின் படி, 2023-ல் 10,20,000 பேர் இன்ஸ்டாகிராமை நீக்க முயன்றனர்; Snapchat செயலியை 1,28,500 நீக்க முயன்று தேடி உள்ளனர். ட்விட்டர் 12,300, டெலிகிராம் 71,700, பேஸ்புக் 24,900, யூடியூப் 12,500; வாட்ஸ்அப் 4,950 மற்றும் WeChat 2,090 ஆகும்.
இருப்பினும், பல ஆண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிகள், விளம்பரங்களின் வருகை மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான இடமாகப் பயன்பாடு ஆகியவை பயனர்களின் வரவேற்பை பெறாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக இந்த முடிவு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும் இன்ஸ்டாகிராம் உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் மக்கள் இந்த செயலியை நீக்குவதை தொடர்ந்து எதிர்பார்த்தால், அது எதிர்காலத்தில் பிரபலமான செயலிக்கு அழிவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.