ட்விட்டர் சமூகவலைதளத்தை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்து ஊழியர்கள் பணி நீக்கம், ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு சந்தா என அடுத்த அதிரடியை களமிறக்கினார்.
பல துறையைச் சேர்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் அதை அங்கீகரித்து அவர்களுக்கு ப்ளூ டிக் வழங்குகிறது. இந்த வசதிக்கு மாத சந்தா வசூலிக்கப்படும் என மஸ்க் அறிவித்தார். அதன்படி நாளை (டிசம்பர் 12) முதல் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை தொடங்கப்பட உள்ளது என நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ டிக் சந்தாதாரர்கள் 1080p தரத்திலான வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம், ட்விட்களை எடிட் செய்யலாம் மற்றும் பிற பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது.
எவ்வளவு கட்டணம்?
ட்விட்டர் ப்ளூ வசதியைப் பெற ஆண்ட்ராய்டு பயனர்கள் 8 அமெரிக்க டாலர் (ரூ. 661.24) செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஐபோன் பயனர்கள் 11 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்றாலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரின் கமிஷன் அதிகம் காரணமாக ஐபோன் பயனர்களிடமிருந்து ட்விட்டர் 3 டாலர்கள் கூடுதலாக வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.
ஜூலை 2022 முதல் ஆப்பிள் ஆப் ஸ்டோர் பரிவர்த்தனைகள் மற்றும் வேறு நிறுவன செயலி பதிவேற்றத்திற்கு 30 சதவீத கமிஷன் விகிதத்தை வசூலிப்பதாக அறிவித்தது. இது தொடர்பாகவும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும் மஸ்க் ட்விட்டரில் ஆப்பிள் சி.இ.ஓ டிக் குக்கிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் இருதரப்பும் சந்தித்து பேசினர். இந்நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் கமிஷன் காரணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”