உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது இந்தியா உள்பட ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஒப்பந்த தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிளாட்ஃபார்மரின் கூற்றுப்படி, 5500 ஒப்பந்த தொழிலாளர்களில் 4400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ. 661.24) கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து அதை அமல்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு எந்தவித முன்னறிப்பும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செலவின குறைப்பு காரணமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், மஸ்க் ஊழியர்களிடம் "எதிர்வரும் கடினமான காலங்களுக்கு" தயாராக இருக்குமாறு கூறியுள்ளார். மேலும் ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மஸ்க் தெரிவித்தாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரில் விளம்பரங்களை குறைத்து, சந்தாக்கள் மூலம் வருவாய் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. ட்விட்டர் போல் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. சுமார் 11,000 ஊழியர்கள் 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் குறித்து மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், "மெட்டாவின் வரலாற்றில் நாங்கள் செய்த சில கடினமான மாற்றங்கள்" என்று தெரிவித்தார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுவனம் பலரை வேலைக்கு அமர்த்தியது, ஆனால் தற்போதுள்ள சூழல் நிலையானதாக இல்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”