உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் இருப்பிடம் மற்றும் விமானம் குறித்தான தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டதாக நேற்று பத்திரிகையாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கினார். தொடர்ந்து இது குறித்து, பத்திரிகையாளர்களின் கணக்குகளை எப்போது தடை நீக்கம் செய்யலாம் என மஸ்க் ட்விட்டர் பயனர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார். மொத்தம் வாக்களித்த 3.6 மில்லியன் பேரில், 58.7% பேர் "இப்போது தடை நீக்கம் செய்யுங்கள்"
என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தடை நீக்கம் செய்யப்பட்டது.
சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி இன்டிபென்டன்ட் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.
டைம்ஸ் நிருபர் Ryan Mac (@rmac18), போஸ்ட் நிருபர் ட்ரூ ஹார்வெல் (@drewharwell), சி.என்.என் நிருபர் டோனி ஓ'சுல்லிவன் (@donie), மற்றும் Mashable நிருபர் Matt Binder @MattBinder ஆகியோரின் கணக்குகள் முடக்கப்பட்டது.
என்ன நடந்தது?
மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட் விமானத்தை கண்காணித்தாக @elonjet என்ற ட்விட்டர் கணக்கு முதலில் முடக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் தன் குழந்தைகள் சென்ற காரை யாரோ மர்ம நபர் பின்தொடர்ந்ததாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு அவரது தனிப்பட்ட ஜெட் விமானம் கண்காணிக்கப்பட்டது தான் காரணம் எனச் சுட்டிக்காட்டினார்.
பத்திரிகையாளர்கள் தொடர்பு
@elonjet முடக்கம் குறித்த செய்து மற்றும் அதற்கு முன்பு அந்த கணக்கில் இருந்த சில லிங்க்-களை பொது வெளியில் பகிர்ந்ததாக மஸ்க் குற்றஞ்சாட்டுகிறார். ட்விட்டரின் டாக்ஸிங் மற்றும் தனியுரிமை மீறல் விதியின் அடிப்படையில் பத்திரிகையாளர்களின் கணக்குகளை மஸ்க் முடக்கியதாக கூறப்பட்டது.