இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் பல்வேறு நகரங்களில் தங்கள் 5ஜி சேவையை வழங்கிவருகின்றன. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட 3 மாதங்களுக்குள் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவையை வழங்குகின்றன. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் தனது 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடுத்தாண்டில் 2023-ம் ஆண்டு கூட 5ஜி சேவை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
5ஜி பேண்டுகளின் ரேடியோ அலைவரிசை விமானங்கள் வழிசெலுத்தலை பாதிக்கும் அச்சம் இருப்பதால் அப்பகுதிகளில் 5ஜி சேவை வழங்க தாமதமாகும். மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 5G அதாவது C-Band 5G ரேடியோ அலைவரிசை ஸ்பெக்ட்ரம் விமானங்களின் ரேடியோ அல்டிமீட்டர்களை பாதிக்கும் அச்சம் உள்ளது.
விபத்து அல்லது சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்திய விமான நிலையங்களின் 2.1 கிமீ எல்லைக்குள் C-band 5G சேவையை நிறுவ வேண்டாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தின் ரேடியோ (ரேடார்) ஆல்டிமீட்டர்களில் சி-பேண்ட் 5ஜியின் சாத்தியமான தாக்கத்தை மேற்கோள் காட்டி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. "ரேடியோ அல்டிமீட்டர்களில் ஏற்படும் மாற்றம், புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் மற்றும் வான்வழி பயணத்தை பாதிக்கலாம். ஓடுபாதையின் இரு முனைகளிலிருந்தும் 2,100 மீட்டர் மற்றும் விமான நிலையங்களின் ஓடுபாதையின் மையக் கோட்டிலிருந்து 910 மீட்டர் தொலைவில் 3,300-3,670 மெகா ஹெர்ட்ஸில் 5G பேண்ட்
இருக்கக்கூடாது" என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், பழைய விமானங்களில் இருந்து விமான ரேடியோ ஆல்டிமீட்டர் பில்டர்களை மாற்றும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஈடுபட்டு வருகிறது. அதுவரையில் இந்த கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாற்றத்திற்கு கால தாமதம் ஆகும் நிலையில், விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களை அதுவரையில் 5ஜி சேவை பயன்படுத்த முடியாது.
ஏர்டெல் ஏற்கனவே நாக்பூர், பெங்களூரு, டெல்லி, குவஹாத்தி மற்றும் புனே ஆகிய விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/