உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கினார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) ஒப்பந்தத்தை இறுதி செய்து அண்மையில் வாங்கினார்.
உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறினார். மேலும், பயனர் சரிபார்ப்பு செயல்முறைகளை முழுவதும் மாற்றியமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளை மஸ்க் வித்தியாசமான முறையில் தெரிவித்து வருகிறது. அதாவது, பயனர்கள் ட்விட்டரில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறது. அந்தவரிசையில் தற்போது Vine செயலியை மீண்டும் கொண்டு வருவது குறித்து கூறியுள்ளார். இதற்காக ட்விட்டரில் கணக்கெடுப்பு நடத்தினார். Bring back Vine? எனக் கேட்டு கணக்கெடுப்பு நடத்தினார். அதில் 70% பேர் ஆம் (வேண்டும்) என்றும் 30% பேர் இல்லை (வேண்டாம்) என்று பதிலளித்துள்ளார்.
Vine செயலி என்ன?
Vine செயலியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதன் பழைய கோடுகளை ட்விட்டர்
பொறியாளர்களிடத்தில் ஆய்வு செய்யும்படி மஸ்க் கூறியதாக கூறப்படுகிறது. Vine செயலி இப்போதுள்ள டிக் டாக், இன்ஸ்டா ரில்ஸ்-க்கு முன்னோடி. 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறுகிய வீடியோ ஆப் ( short video platform) ஆகும். இதில் பயனர்கள் 6 விநாடி வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றம் செய்யலாம். தற்போதுள்ள டிக் டாக், ரில்ஸ் போன்ற அப்போது கொண்டு வரப்பட்ட செயலி ஆகும்.
ஃபேஸ்புக்-ஆல் சரிந்த Vine
Vine (வைன்) செயலியை டோம் ஹாஃப்மேன், ரஸ் யூசுபோவ் மற்றும் கொலின் க்ரோல் ஆகியோரால் 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை ட்விட்டர் நிறுவனம் வாங்கியது. 2013 தொடக்கத்தில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளில் வைன் 200 மில்லியன் பயனர்களை பெற்றது. இன்ஸ்டாகிராம், பீட் செயலிகளுக்கு போட்டியாக அமைந்தது.
இந்தநிலையில், வைனின் வளர்ச்சியை குறி வைத்து ஃபேஸ்புக் ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. ஃபேஸ்புக் மூலம் வைன் செயலி பயன்படுத்தும் மற்ற நண்பர்களை கண்டறியும் அம்சத்தை ரத்து செய்தது. தகவல்களை கண்டறிய முடியாத படி இணைப்பை துண்டித்தது. இது வைன் செயலிக்கு பின்னடைவைத் தந்தது. பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் தனது சொந்த குறுகிய வீடியோ வசதியை அறிமுகப்படுத்தியது.
நீதிமன்ற ஆவணங்களில், மார்க் ஜுக்கர்பெர்க் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தது தெரியவந்தது. கட்டுப்பாடுகளால் வைன் அதன் பயனர்களை இழந்தது.நாளடைவில் Instagram மற்றும் TikTok (ஆரம்பத்தில் Musical.ly) போன்ற செயலிகள் வளர்ச்சி பெற தொடங்கின.
அக்டோபர் 10, 2016 அன்று வைன் பயனர்கள் இனி புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள வீடியோக்களை மட்டுமே மீண்டும் பார்க்க/பதிவிறக்க முடியும் எனக் கூறப்பட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, வைன் செயலி முற்றிலுமாக மூடப்பட்டது. செயலி ‘வைன் கேமரா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது வரவேற்பு பெறவில்லை. கிரியேட்டர்கள் (creators), பயனர்களை (users) வேறு தளத்திற்கு மாறினர்.
மீண்டும் Vine?
ட்விட்டர் தளத்தை இப்போது எலான் மஸ்க் வாங்கியுள்ளதால், வைன் செயலி மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியதும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. Vine மற்ற வீடியோ ஆப்களிலிருந்து தனித்துவமாக புது அம்சங்களுடன் வெளியிடப்படுமா? என பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.